என் மலர்
தமிழ்நாடு
வினோத நிகழ்ச்சி- மழை வேண்டி கோவில் குதிரைக்கு வளைகாப்பு
- குதிரையை குளிக்கவைத்து, அதன் உடலுக்கு பட்டு துண்டு கட்டிவிட்டனர்.
- வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூலமாக வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமமும் வழங்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அம்மன்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு பெண் குதிரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோவில் திருவிழாவின்போது இந்த குதிரை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வரப்படும். இதற்கிடையே குதிரை கர்ப்பமாக இருந்தது.
இந்தநிலையில் பருவமழை பெய்ய வேண்டி கிராம மக்கள் கர்ப்பமாக இருந்த குதிரைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை கிராம மக்கள் வீடுகளில் இருந்து வளையல், கலவை சாதம், சந்தனம், குங்குமம், பூ என வளைகாப்புக்கு தேவையான சீர் வரிசை தட்டுகளுடன் கோவிலுக்கு வந்தனர்.
அதன் பின்னர் குதிரையை குளிக்கவைத்து, அதன் உடலுக்கு பட்டு துண்டு கட்டிவிட்டனர். குதிரையின் கழுத்துக்கு பெண்கள் வளையல்களை தொடுத்து, மாலையாக அணிவித்து நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து குதிரைக்கு புளிசாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை, தயிர் என 5 வகை கலவை சாதத்தை பெண்கள் ஊட்டிவிட்டனர். ஆண்கள் பூ தூவி வாழ்த்தினார்கள். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை குதிரையின் மீது கட்டப்பட்டு இருந்த பட்டு துண்டில் மொய் பணமாக வைத்தனர். அனைவருக்கும் 5 வகை சாதத்துடன் விருந்தும் நடைபெற்றது.
வளைகாப்பு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு தாம்பூலமாக வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமமும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரிடம் கேட்டபோது, 'கோவில் குதிரை கர்ப்பமாக இருக்கும்போது அதற்கு வளைகாப்பு நடத்தினால் பருவமழை தவறாமல் பெய்யும். ஊர் மக்கள் நோய் நொடியின்றி இருப்பார்கள்' என்றார்.
இந்த வினோத நிகழ்ச்சியை கண்டு ரசிக்க அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.