என் மலர்
தமிழ்நாடு
தாசில்தாரை தாக்கியதாக வழக்கு: மு.க.அழகிரி விடுதலை
- கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
- மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவானது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர். விசாரணை முடிவில் கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி முத்துலட்சுமி பிறப்பித்தார். இதையடுத்து இன்று மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மீதமுள்ள மற்றொரு திருஞானம், கருப்பணன், சோலை, ராமலிங்கம் ஆகிய 4 பேரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலையானதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.