search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு
    X

    கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு

    • போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது.
    • எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். கடந்த 19-ந்தேதி சிவராமன் கைது செய்யப்பட்டார்.

    போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பி ஓட முயற்சித்ததில் அவரது காலில் முறிவு ஏற்பட்டது. இதற்கு மாவு கட்டு போடப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சிவராமன் திடீரென சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைது செய்யப்படுவதற்கு ஒருநாளைக்கு முன்னதாகவே எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சிவராமன் 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் அவசர கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில், இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த போலீஸ் ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல நேரில் விசாரணை நடத்தி உரிய பரிந்துரைகள் அளிக்க சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழுவும் அமைத்தார்.

    சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டது குறித்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறுகையில் "மாணவி பலாத்கார வழக்கில் கைதாகி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கடந்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் அவர் எலிபேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    இந்த நிலையில், தற்போது தப்பி ஓட முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டு சிவராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். முன்னதாக கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, அவர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

    தற்போது சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடார்" நேற்று விளக்கம் அளித்திருந்தார்.

    Next Story
    ×