என் மலர்
தமிழ்நாடு
லைவ் அப்டேட்ஸ்:அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
- ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
- கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
Live Updates
- 11 July 2022 4:00 PM IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆறுதல் கூறினார்.
- 11 July 2022 3:19 PM IST
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
- 11 July 2022 2:07 PM IST
மயிலாப்பூர் தாசில்தாரின் கட்டுப்பாட்டில் அதிமுக தலைமை அலுவலகம் வநதுள்ளது. அலுவலகத்தை திறப்பது தொடர்பாக சிவில் நீதிமன்றத்தை நாடி உரிய உத்தரவை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 11 July 2022 1:08 PM IST
அ.தி.மு.க. அலுவலகத்தை ஓ.பி.எஸ். சேதப்படுத்தி உள்ளார். ஓ.பி.எஸ். செயல் கண்டத்திற்குரியது.
எத்தனை ஓ.பி.எஸ். வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்று பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
- 11 July 2022 12:47 PM IST
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
- 11 July 2022 12:43 PM IST
அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையடுத்து, புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார்.
- 11 July 2022 12:43 PM IST
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு தொடர்பாக, ராயப்பேட்டை காவல் நிலையத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்காக ஆர்டிஓ சாய் வர்தினி மற்றும் காவல்துறை அதிகாரிகள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ஓபிஎஸ் புறப்பட்டுச் சென்றார்.
- 11 July 2022 12:27 PM IST
“ஓபிஎஸ் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைத்தும் அவர் ஒத்துழைக்கவில்லை. ஒற்றை தலைமை கோரிக்கையை கடைசி வரை ஏற்கவில்லை. சொந்த கட்சியின் கூட்டத்தை நடக்கக் கூடாது என நினைத்தவர் ஓபிஎஸ். அவருக்கு எப்போதும் சுயநலம்தான் முக்கியம். தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைப்பவர்” என பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பேசினார்.
- 11 July 2022 12:23 PM IST
திமுகவுடன் ஓபிஎஸ் உறவு வைத்துக்கொண்டு செயல்பட்டார். ஒரு கட்சி தலைவரே இப்படி இருந்தால் அந்த கட்சி எப்படி ஆட்சிக்கு வரும்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி.
- 11 July 2022 12:17 PM IST
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சி பல சோதனைகள் கண்டதாகவும், பொதுச்செயலாளர் பதவியில் கடுமையாக உழைத்து தொண்டர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவேன் என்றும் எடப்பாடி பழனிசாமி உறுதி.