என் மலர்
தமிழ்நாடு
திமுக ஆட்சியில் 4 முதல்வர்களா? எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
- திமுக ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளையெல்லாம் பரப்ப நினைப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
- ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள்.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடப்பதாகவும், 4 முதல்வர்கள் இருப்பதாகவும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்தார். மு.க..ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வராக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவரது மனைவி, மகன், மருமகன்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மறைமலைநகரில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இருந்த அவலங்கள் உங்களுக்கு தெரியும். இப்போது எங்கள் ஆட்சியின் மீது இட்டுக்கட்டிய கதைகளையெல்லாம் பரப்ப நினைக்கிறார்கள். அவர்கள் இப்போது போடும் ஆர்ப்பாட்ட கோஷங்கள் மக்களுக்கு தெரியாதா? மக்கள் புரிந்துகொள்ள மாட்டார்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருப்பவர்கள் நாங்கள். அதிகாரத்துக்கு வந்துவிட்டால் விலகிச் செல்பவர்கள் அல்ல.
திமுக ஆட்சியில் 4 முதலமைச்சர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புதிதாக கண்டுபிடித்து பேசிக்கொண்டிருக்கிறார். 4 முதலமைச்சர்கள் அலல, யாரெல்லாம் நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குகிறார்களோ, எந்த ஆலோசனைகள் எல்லாம் செயல்வடிவம் பெறுகிறதோ, அனைவரும் சேர்ந்துதான் இந்த ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கடந்த கால அதிமுக ஆட்சியைப் போல் அல்ல இந்த ஆட்சி. இந்த ஆட்சியை வழிநடத்துவது திராவிடமாடல் என்ற பெரும் தத்துவம்.
இவ்வாறு அவர் பேசினார்.