search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் பலி
    X

    நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் பலி

    • நெல்லை வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
    • கனமழையால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 215 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 16-ந்தேதி தொடங்கி நேற்றுமுன்தினம் மதியம் வரை வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் நெல்லை வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    கடும் வெள்ளத்தில் ஆங்காங்கே சிலர் அடித்துச் சென்றுள்ளனர். இந்தநிலையில் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் உடல்கள் ஆங்காங்கே பிணமாக மிதந்தபடி உள்ளது. அதாவது நெல்லை சந்திப்பு பகுதியில் 60 வயது முதியவரும், சி.என்.கிராமம் பகுதியில் 80 வயது முதியவர் உடலும் பிணமாக மிதந்தது. இவர்கள் இருவரின் உடல்களையும் சந்திப்பு போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நெல்லைபேட்டை சுத்தமல்லி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் வள்ளுவன் (58). கூலி தொழிலாளியான இவர் நெல்லை டவுனில் உள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை கிருஷ்ணபேரி ஓடைக்கரை தெருவை சேர்ந்தவர் கடற்கன்னி (58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்றுமுன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள குளத்து மறுகால் தண்ணீரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். இதனை பார்த்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் கடற்கன்னி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினரும் அவரை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை டவுண் மாதா பூங்கொடி தெரு பகுதியில் கடற்கன்னி உடல் மீட்கப்பட்டது. இதேபோல் பாளையங்கோட்டை பகுதியில் வீடு இடிந்து விழுந்து முதியவர் ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். அவருடைய பெயர் விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழை வெள்ளத்துக்கு இதுவரை நெல்லை மாவட்டத்தில் 10 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளுடன் என்.ஜி.ஓ. காலனி ஓடையில் விழுந்தார். இதனால் அவரை வெள்ளம் அடித்துச்சென்றது. அவரை தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே கனமழையால் நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் 215 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள் பகுதியாகவும் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

    Next Story
    ×