என் மலர்
தமிழ்நாடு

பள்ளிப்பாளையத்தில் கடத்தப்பட்ட தொழிலதிபர் கொலை- ஏரிக்கரையில் சடலமாக மீட்பு

- நாமக்கல் வெப்படை அருகே பாதரையில் 22-ம் தேதி கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கவுதம் சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
- கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெப்படை பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து பேராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை பாதரை செட்டுக்காரன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 36). இவருடைய மனைவி திவ்யபாரதி (29). கவுதம் வெப்படையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் அவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவராக உள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 9.30 மணிக்கு கவுதம் நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு பாதரையில் உள்ள வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் அருகே இருட்டான பகுதியில் மறைந்து இருந்த மர்ம நபர்கள், கவுதம் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாங்கள் வந்த காரில் ஏற்றி கடத்தி சென்றனர். இது குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சி.சி.டிவி. காட்சிகள் ஆய்வு மேலும் 6 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வந்தனர்.
தனிப்படை போலீசார், அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடத்தல் நடந்த நேரத்தில் செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியான செல்போன் அழைப்பு விபரங்கள் குறித்து செல்போன் நிறுவனங்களிடம் கேட்டு அறிந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட நிதி நிறுவன அதிபர் கவுதம் சேலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்ககிரி அருகே வைகுந்தம் ஏரிக்கரையில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த கவுதமின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வெப்படை பகுதியில் 200க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகியான கவுதமை மிளகாய்ப் பொடி தூவி காரில் கடத்திச் சென்று கொன்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.