என் மலர்
தமிழ்நாடு
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு - இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
- உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும்.
- பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ.1,100 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த ஜனவரி 2-ந்தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவுபெறாததால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. தற்போது, பணிகள் நிறைவு பெற்றன. இதனால் இன்று முதல் புதிய முனையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
முன்னதாக திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் 100 சதவீத பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து இன்று காலை 6 மணி முதல் அனைத்து விமானங்களும் இயக்கப்படுகிறது. பயணிகள் அனைவரும் புதிய முனையத்தை பயன்படுத்த வேண்டும்.
உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய முனையத்தில் இருந்துதான் இயக்கப்படும். 75 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆண்டுக்கு 44½ லட்சம் பயணிகளை கையாள முடியும். ஒரு மணி நேரத்திற்கு 3,480 பயணிகளை கையாள முடியும். புதிய முனையத்தில் 104 குடியுரிமை கவுண்ட்டர்கள் செயல்பட உள்ளது.
பயணிகளுக்கும், பயணிகளுடன் வருபவர்களுக்கும் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. புதிய முனையத்தில் முதல் கட்டமாக 5 ஏரோ பிரிட்ஜ்கள் பயன்படுத்த உள்ளோம். மீதமுள்ள 5 ஏரோ பிரிட்ஜ்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். புதிய முனையம் சாலையிலிருந்து சற்று தொலைவில் உள்ளதால் பஸ் இயக்க போக்குவரத்து துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17 லட்சத்து 60 ஆயிரம் பயணிகளை கையாண்டுள்ளோம். அதில் சர்வதேச பயணிகள் மட்டும் 13 லட்சத்து 50 பேர் ஆவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu | AAI Staff welcoming passengers at the new integrated terminal building of Tiruchirappalli International Airport which is going operational today.
— ANI (@ANI) June 11, 2024
Prime Minister Narendra Modi inaugurated this integrated terminal in January, this year. pic.twitter.com/sukCNIh5Yo