என் மலர்
தமிழ்நாடு
அரசு பஸ் கவிழ்ந்து விபத்து- ஒருவர் பலி
- விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூா்:
திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.
இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.
தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.