என் மலர்
தமிழ்நாடு
கமல்ஹாசனின் அரசியல் சாயம் வெளுத்துவிட்டது- வானதி சீனிவாசன்
- வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்?
- கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம்.
கோவை:
பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. மாநிலங்களவையில் மட்டும் ஒரு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
கமல்ஹாசன் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, பொதுமக்கள் அணுக முடியாத அளவுக்குதான் இருந்தார். அவருக்கு சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தனர். இப்போது மீண்டும் போட்டியிடும் மனநிலையில் இருந்து மாறியுள்ளார். கோவையில் மூக்கு உடைபட்டாலும் நான் வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நாங்களும் ஆவலுடன் காத்திருந்தோம். அவர் போட்டியிடாதது எங்களுக்கு ஏமாற்றம்தான்.
தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொல்லி வந்தார். ஆட்சி அமைக்க போகிறேன் என்று சொல்லி வந்த கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தில் எந்த கட்சியை விமர்சித்தாரோ, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்? அரசியல் ஆசைக்காக அந்த பதவியை எடுத்துள்ளார்.
அவர் நட்சத்திர பேச்சாளர். அந்த நட்சத்திர பேச்சாளருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி விலை அவ்வளவுதான். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம். இப்போது அவரது அரசியல் சாயம் வெளுத்துவிட்டது.
இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.