என் மலர்
தமிழ்நாடு
திருவள்ளூர் அருகே சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் மறியல்
- சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
- சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ளது போளிவாக்கம் சத்திரம் பகுதி. இங்கு இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை உள்ள சுமார் 7 கிலோமீட்டர் சாலையை போளிவாக்கம் சத்திரம் வழியாக புதுகண்டிகை, குன்னத்தூர், பள்ளகாலனி, மேட்டு காலனி, அழிஞ்சிவாக்கம், ஆஞ்சிவாக்கம், பூவேலி குப்பம் மேட்டுச்சேரி, வெள்ளக்கால்வா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் , மருத்துவசிகிச்சை உள்ளிட்டவைக்கு செல்ல இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து அழிஞ்சிவாக்கம், வெள்ளகால்வா வரை சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.
இதற்காக கடந்த ஒரு ஆண்டுகுக்கு முன்பே போளிவாக்கம் சத்திரம் பகுதியில் இருந்து வெள்ளகால்வா வரை 7 கி.மீ தூரம் ஏற்கனவே இருந்த சாலை அகற்றப்பட்டு ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் அதன்பிறகு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டன.
தற்போது சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களில் அப்பகுதி கிராமமக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் வாகனங்களின் டயர்களை சேதம் அடைந்து அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜல்லி சாலையில் முதியோர் பள்ளி மாணவ மாணவிகள், கிராமத்தினர் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதையடுத்து சாலை அமைக்கப்படாததை கண்டித்தும், உடனடியாக சாலை அமைக்க கோரியும் போளிவாக்கம் சத்திரம் பகுதி கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.