என் மலர்
தமிழ்நாடு
திருச்செங்கோடு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை
- ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் நடுப்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலை நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 65), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சிந்தாமணி (52). இவர்களுக்கு சசிரேகா என்ற மகள், ஜெயப்பிரகாஷ், நந்தகுமார், கோபி ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.
இதில் சசிரேகா, ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். மகன் கோபி திண்டுக்கல்லில் தச்சுவேலை செய்து வருகிறார். மற்றொரு மகன் நந்தகுமார் (35) பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நடேசனுக்கும், நந்தகுமாருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்காக அவர்கள் பல இடங்களில் வைத்தியம் பார்த்தனர். நடேசனுக்கு தச்சு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், கடன் வாங்கி சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. பலரிடம் அவர் கடன் வாங்கி இருந்தார்.
இதனிடையே கடன் கொடுத்தவர்கள் நடேசனிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமலும், நோய் பாதிப்பாலும் அவதிப்பட்ட நிலைியல் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். விரக்தியில் இருந்த அவர் தனது மனைவி, மகனிடமும் இதை கூறியுள்ளார். இதனால் அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தனர்.
அங்கு நடேசன், சிந்தாமணி, நந்தகுமார் ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.
பின்பு பிரேத பரிசோதனைக்காக உடல்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் வையப்பமலை நடுப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.