என் மலர்
தமிழ்நாடு

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்: முதல்-அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்

- மைதானத்தின் மொத்த பரப்பளவு 66.80 ஏக்கர் ஆகும்.
- ஏறுதழுவுதல் அரங்கம் மட்டும் 16 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. 4500 பேர் பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைப்பு.
தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.
அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவுதல் அரங்கம்- 16 ஏக்கர், அரங்க கட்டிட பரப்பளவு - 77683 சதுர அடி, பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் - 4,500 என பிரமாண்ட மைதானம் கட்டப்பட்டு உள்ளது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மைதானத்திற்கு செல்வதற்கு வசதியாக புதிதாக சாலைகள் போடப்பட்டு உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் முடிந்தவுடன் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திறப்பு விழா இன்று நடக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கின்றன.
500 காளைகள் சீறிப்பாய, 300 வீரர்கள் பிடிக்க உள்ளனர்.