என் மலர்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி சாணக்கியர் என்பதை 2026 சட்டசபை தேர்தல் மூலம் நிரூபிப்போம்- செல்லூர் ராஜூ
- மதுரையில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேரும் மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
- பாராளுமன்ற தேர்தல் ஒரு அளவுகோல் அல்ல.
மதுரை:
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை நகர் பகுதிக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர்மட்ட மேம்பாலங்கள், சாலை வசதிகள் உள்ளிட்ட ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை செய்து இருக்கிறோம். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் தி.மு.க. மதுரை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கலைஞர் பெயரில் நூலகம், ஜல்லிக்கட்டு மைதானம் மட்டுமே கட்டியுள்ளனர்.
மதுரையில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் இரண்டு பேரும் மதுரைக்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வீதிவீதியாக சென்று வாக்குகள் கேட்டோம். வேட்பாளரை வானுயர புகழ்ந்தோம். ஏழைகளின் மருத்துவர் மக்களின் மருத்துவர் என்றெல்லாம் கூறினோம். அவரது மருத்துவமனைக்கு சென்றால் இலவசமாக ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று கூட கூறினோம். ஆனாலும் மதுரை மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் ஒரு நிலைப்பாட்டை கடை பிடித்துள்ளனர். சிறுபான்மை மக்கள் ராகுல் காந்திக்கும், குறிப்பிட்ட சமுதாயத்தினர் பிரதமர் மோடிக்கும் வாக்களித்ததால் அ.தி.மு.க.வுக்கு எதிர்பார்த்த ஓட்டுகள் கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் ஒரு அளவுகோல் அல்ல. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சாணக்கியர் என்பதை தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்து காட்டுவோம்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பரிசாக மின்கட்டண உயர்வை தி.மு.க. அரசு மக்களுக்கு தந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கருப்பு சட்டை போட்டுக்கொண்டு போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின், முதலமைச்சரான பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளார். மேலும் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு வரிச்சுமைகளை தந்து வருகிறார். இதனை கண்டித்து வருகிற 23-ந்தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தை அ.தி.மு.க. நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.