என் மலர்
தமிழ்நாடு
பாபர் மசூதி இடிப்பு தினம்: கோவையில் 1000 போலீசார் பாதுகாப்பு
- விமான நிலையத்துக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
- கோவையில் நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.
கோவை:
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாளை (6-ந் தேதி) நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்திலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், வால்
பாறை உள்ளிட்ட இடங்களில் உள்ள பஸ்நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதேபோல ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
ரெயில் நிலைய நுழைவு வாயில்களில் உள்ள மெட்டல் டிடெக்டர் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. ரெயில்களிலும், ரெயில் தண்டவாளங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனையில் ஈடுபடுகிறார்கள். ரெயில்களில் வரும் பார்சல்களை மோப்பநாய் கொண்டு போலீசார் சோதிக்கிறார்கள். விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
விமான நிலையத்துக்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் முக்கிய கோவில்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். இதற்கிடையே பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நாளை சில அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.