என் மலர்
தமிழ்நாடு
இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது
- புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- மீனவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் அச்சுறுத்தல்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
குறிப்பாக எல்லை தாண்டி வந்ததாக கூறி நடுக்கடலில் வைத்து அவர்களை சிறைபிடிப்பது, படகுகளை பறிமுதல் செய்தல், தாக்கி விரட்டி அடித்தல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்டவைகளால் நஷ்டத்தையும் சந்திக்கின்றனர்.
புத்தாண்டு பிறந்தது முதல் இயற்கை சீற்றம், கடலுக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் அனைத்து தடைகளும் விலகிய நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் கச்சத்தீவு, நெடுந்தீவு அருகே பாரம்பரிய பகுதியில் வலைகளை விரித்து மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினரை பார்த்து பல மீனவர்கள் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் ராமேசுவரத்தை சேர்ந்த முகேஸ்குமார், மரிய ரெட்ரிசன் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுளை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
மீனவர்களின் படகுகளுக்குள் தாவிக்குதித்த அவர்கள் படகில் பிடித்து வைத்திருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக்கொண்டனர். பின்னர் எல்லை தாண்டி வந்ததாக கூறி களஞ்சியம் (வயது 47), முனீஸ்வரன் (49), கார்மேகம் (60), கண்ணன் (43), தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிஸ்மன் (25), பிரியன் (30), மரிய ஜான் ரெமோரா (48), சவேரியார் அடிமை (48) ஆகிய 8 மீனவர்களையும் சிறைபிடித்து, அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அவர்களை காங்கேசன் துறைமுக அலுவலகத்திற்கு கொண்டு சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் நாளை அவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அதன்பின்னரே அவர்கள் விடுதலை ஆவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரியவரும்.
ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் 17 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேசுவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.