என் மலர்
தமிழ்நாடு
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
- ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வெளியூரில் இருந்தும் பார்வையாளர்கள் வருகை.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறுகிறது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் துவங்கிய ஜல்லிக்கட்டு, மாட்டுப் பொங்கல் தினத்தில் பாலமேட்டில் நடைபெற்றது.
அந்த வரிசையில், உலகளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை காண நேற்று இரவு முதல் பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 1,100 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தளபதி, தமிழரசி மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்த தகுதியான 1,000 காளைகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து விடப்பட்டன. இதேபோல் தகுதி பெற்ற 900 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் அனும திக்கப்பட்டு 10 க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுகளாக போட்டி நடைபெறுகிறது.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகன் இன்பநிதியுடன் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசித்தார். களத்தில் நின்று விளையாடிய காளைகளையும், சீறிப்பாய்ந்த காளைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு அடக்கிய காளையர்களின் வீரத்தையும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
ஒருசில வீரர்களுக்கு தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். போட்டி முழுவதிலும் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பாக மருத்துவபரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று காலை போட்டி தொடங்கியதும் ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஆக்ரோஷத்து டன் சீறிப்பாய்ந்து வந்த நாட்டின காளைகள் துள்ளிக்குதித்து வீரத்தை வெளிப்படுத்தின. பெரும்பாலான காளைகள் தேங்காய் நார் பரப்பப்பட்ட களத்தில் கால்களை வாரி இறைத்து தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சியை எடுத்துக் காட்டியது.
யாருக்கும் பிடிபடாமல் வளர்ப்பாளர்களின் அழைப்புக்கு செவி சாய்த்து அவர்களுடன் வெற்றியுடன் புறப்பட்டு சென்றது மேடையில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்த அமைச்சர்கள் மற்றும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. களத்தில் இறங்கி விட்டால் போட்டிதான் என்ற உணர்வில் காளையும், காளையர்களும் மல்லுக்கட்டிய காட்சிகள் மெய்சிலிர்க்க வைத்தது.
பல காளைகள் சீறிப்பாய்ந்து வாடிவாசலில் இருந்து வெளியேறி பிடிபடாமல் சென்று பரிசுகளை தட்டிச் சென்றது. மாடுபிடி வீரர்களும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளைப் பெற்றனர்.
#WATCH | Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin flags off the Jallikattu event at Alanganallur in Madurai district on the occassion of Kaanum Pongal pic.twitter.com/MVOpa2Usz4
— ANI (@ANI) January 16, 2025