என் மலர்
தமிழ்நாடு

Chappal தான் போடாமல் இருக்கிறேன், ஜெயிலுக்கு செல்லவில்லை - அண்ணாமலை

- தி.மு.க.வினருக்கு மக்கள் பிரச்சனை குறித்து எந்த கவலையும் இல்லை.
- மீனவர் பிரச்சனையை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி தனியார் மகாலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் இல்ல திருமண விழாவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-
அமைச்சர் சேகர்பாபு என்னை கர்நாடகா டூப் போலீஸ் என விமர்சித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு அந்தத் துறைக்கு சம்பந்தமே இல்லாத நபர். வேண்டுமென்றால் அமைச்சர், நான் வேலை பார்த்தது தொடர்பாக சோதனை செய்து கொள்ளட்டும். அதுமட்டுமல்லாது பொழுது விடிந்தால் போதும் பா.ஜ.க.வினரை விமர்சிப்பதே தி.மு.க.வினரின் தொழிலாக உள்ளது.
தி.மு.க. சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணத்திற்கு செல்கிறோம் என்றால் திருமணத்திற்கு தான் செல்கிறோம் என தெரிந்து செல்வோம். ஆனால் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என தெரியாமல் அதில் எப்படி கலந்து கொள்வது? எந்த விதத்திலும் தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கான தொகுதி எண்ணிக்கை குறையாது என பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் திட்டவட்டமாக தெரிவித்தும் கூட விதண்டா வாதமாக பேசி வருவது அவர்களின் வாடிக்கை. அப்படி இருக்க அந்த கூட்டத்தில் எப்படி கலந்து கொள்வது?
திராவிட மாடலை அகற்றும் வரை காலில் செருப்பு அணியப் போவதில்லை என சபதம் எடுத்துள்ளேன். செந்தில் பாலாஜி குறித்த விமர்சனம் என்பது காலில் செருப்பு போடாமல் நடக்கலாம் அதில் தவறில்லை, ஜெயிலுக்கு தான் போகக்கூடாது.
மேலும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையே இரு மொழிக் கொள்கையில்தான் படித்ததாக கூறியுள்ளார். நான் மும்மொழி கொள்கையில் தான் படித்தேன். விருப்பமொழியாக தமிழை தேர்வு செய்தேன். படிக்காத நபர்களுக்கெல்லாம் இதைப்பற்றி என்ன தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.