என் மலர்
தமிழ்நாடு
அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில் பாலாஜி அரசியலில் வேடந்தாங்கல் பறவைகள்- எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும்.
- டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்து ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
ஓமலூர்:
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. புறநகர் மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி அதிக வருவாய் கிடைத்தும் ஆண்டுதோறும் ஏன் அதிக கடன் வாங்க வேண்டும். தி.மு.க. ஆட்சி காலம் முடிவதற்குள் தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்து தி.மு.க. அரசு சாதனை படைக்க உள்ளது.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும், சேகர் பாபுவும் என்னை 'அமைதிப்படை அமாவாசை' என்று விமர்சனம் செய்கிறார்கள். இருவரும் அரசியல் வியாபாரிகள். இவர்கள் அ.தி.மு.க.வில் இருந்த போது சட்டசபையில் கருணாநிதி மற்றும் தி.மு.க. முக்கிய பிரமுகர்களை எப்படி எல்லாம் விமர்சனம் செய்தார்கள் என்று அவைக்குறிப்பில் உள்ளது என்பதை அவர்கள் அறிய வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு 'அமைதிப்படை அமாவாசை' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். தனக்குத்தானே அந்த பெயரை தேர்வு செய்து கொண்டார். அமைச்சர்கள் சேகர்பாபுவும், செந்தில் பாலாஜியும் அரசியலில் வேடந்தாங்கல் பறவைகள் போன்றவர்கள்.
சில காலம் ஒரு இடத்தில் இருப்பார்கள். சில காலம் வேறு இடத்திற்கு சென்று விடுவார்கள். இதுவே அவர்களுடைய நிலைப்பாடு. கட்சியின் மீது விசுவாசம் இருப்பவர்கள் என்னை போன்று ஓரிடத்தில் நின்று பொறுமை காப்பார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு ஒரு கட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கிடையாது.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிக மழை பெய்து ஏராளமான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் வீணானதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
அதேபோன்று அரசு கொள்முதல் நிலையங்களில் 17-ல் இருந்து 21 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும். திருச்செந்தூர் கோவிலில் 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அங்கு குடிநீர் கூட கிடைப்பதில்லை என்று பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு திருப்பதியில் 2, 3 நாட்கள் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்யவில்லையா? என்று கூறுகிறார். திருப்பதியில் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அது போன்று இங்கு என்ன வசதிகள் உள்ளது? பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதை விட்டு விட்டு அவர்களை விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, அமைப்பு செயலாளர் செம்மலை மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.