என் மலர்
தமிழ்நாடு
தேர்தல் பறக்கும் படையினர் சோதனை: காரில் கொண்டு வந்த ரூ.1 லட்சம் பறிமுதல்
- அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
- உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே வாக்காளர்களுக்கு பண பட்டுவாடாவை தடுக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் ரொக்க பணம் கொண்டு செல்வதுதடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக ரொக்க பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் எடுத்துச்செல்லும்போது உரிய ஆவணங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் பறக்கும் படை, சோதனைச்சாவடி, நிலையான கண்காணிப்பு படையினரின் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்படும் ரொக்க பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் தினசரி பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை வரை ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 860 பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த நிர்மலா, முஸ்தபா, சண்முகம் ஆகியோரிடம் மொத்தம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 860 திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி எல்லை பகுதியான பவானி ரோடு சுண்ணாம்பு ஓடை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி என்.சதீஸ்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த காரில் ரூ.1 லட்சம் சிக்கியது.
விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்த தபஸ் மந்தல் என்பது தெரியவந்தது. பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை. எனவே பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் ரூ.1 லட்சத்தை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.