search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடும்பத்தகராறில் 2 பிள்ளைகளை வெட்டிக்கொன்ற தந்தை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குடும்பத்தகராறில் 2 பிள்ளைகளை வெட்டிக்கொன்ற தந்தை

    • நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார்.
    • தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள 74. கிருஷ்ணாபுரத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது 42). இவரது மனைவி தவமணி (38). இவர்களுக்கு வித்யதாரணி (13), அருள்குமாரி (12), ஆகிய 2 பெண் குழந்தைகளும், அருள் பிரகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர்.

    அசோக்குமார் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று நெய்வேலியில் இருந்து வீட்டுக்கு வந்த அசோக்குமார் மனைவியுடன் தகராறு செய்தார். இன்று அதிகாலை வேளையில் மனைவி தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகியோர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அசோக்குமார் அவர்களை கண்மூடித்தனமாக வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தவமணி மற்றும் குழந்தைகள் அப்பா விட்டு விடுங்கள்... அப்பா விட்டு விடுங்கள்... என கெஞ்சினர். ஆனால் அசோக்குமார் கோபத்தில் மனைவி மற்றும் தனது குழந்தைகளை கொடூரமாக வெட்டினார். தன் கண் முன்னே கணவர், குழந்தைகளை வெட்டுவதை பார்த்து தவமணி கதறி அழுதார். அப்போது குழந்தைளும் அம்மா, அம்மா என கதறி அழுதது.

    அசோக்குமாரை தவமணி தடுக்க முயன்றார். அவரையும் சரமாரியாக வெட்டினார். கணவரிடம் இருந்து உயிர்பிழைக்க தனது குழந்தைகளுடன் தவமணி தப்பி ஓட முயன்றார். ஆனால் அசோக்குமார் விரட்டி விரட்டி அவர்களை வெட்டினார். இதில் தவமணி, குழந்தைகள் வித்யதாரணி, அருள்குமாரி, அருள் பிரகாஷ் ஆகிய 4 பேரும் வெட்டு காயங்களுடன் வீட்டில் ஆங்காங்கே சுருண்டு விழுந்தனர்.

    4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தவமணியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு கதறியபடி பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர்.

    அரிவாள் வெட்டில் மகள் வித்யதாரணி, மகன் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. தாய் தவமணி மற்றும் மகள் அருள்குமாரி ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஸ்குமார் மற்றும் கெங்கவல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகள் வித்யதாரணி, அருள் பிரகாஷ் ஆகியோர் உடல்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து போலீசார் இந்த கொலைகளை செய்த அசோக்குமாரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முதற்கட்ட விசாரணையில், அசோக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் கடந்த 6 ஆண்டுகளாக நெய்வேலியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தை மது குடித்து செலவழித்து வந்தார். குடும்ப செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் தவமணிக்கும், அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கணவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காததால் தவமணி தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் பணத்தில் 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இந்த நிலையில் அசோக்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து அதிகாலை நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி சாய்த்துள்ளார் என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அசோக்குமார் தலையில் காயம் ஏற்பட்டதாக கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×