என் மலர்
தமிழ்நாடு
சேவல் வைத்து மெகா சூதாட்டம் நடத்திய 20 பேர் கொண்ட கும்பல் கைது
- போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர்.
- ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அருகே தொட்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டம் நடத்துவதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஓட்டலில் 20 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சேவல் மெகா சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அந்த கும்பல் சேவல்களின் கால்களில் கூறிய கத்தியை கட்டி பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது.
போலீசார் கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அது கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சரவணன் (45), மூர்த்தி (44), சிவா (30), கருப்பண்ணன் (50), மணிகண்டன் (30), செந்தில் (50), ஸ்ரீ ஹரி (21), பழனிவேல் (38), கிருஷ்ணராஜ் (25), ஜெகதீஷ் (46), தங்கராஜ் (49), தனசேகரன் (45), குமார் (43), தமிழ் (21), சோமு (55), குகன் (35), செந்தில் ராஜா (41), நாகராஜன் (44), சுரேஷ்குமார் (38) மற்றும் ஓட்டல் உரிமையாளர் பிரகாஷ் ஆகியோர் என தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து 20 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட சேவல்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ரூ.1.32 லட்சம் பணம், 32 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.