என் மலர்
தமிழ்நாடு
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 4,360 கன அடியாக அதிகரிப்பு
- கடந்த 5 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது.
- செம்பரம்பாக்கம் ஏரிக்கு 412 கனஅடியும் தண்ணீர் வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பெஞ்ஜல் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதேபோல் பூண்டி ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நீர் மட்டம் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது.
கேசவபுரம் அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர், ஆரணி ஆறு, நந்தியாற்று தண்ணீர் மற்றும் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 4 ஆயிரத்து 360 கனஅடியாக உயர்ந்து உள்ளது.
கடந்த 5 நாட்களில் பூண்டி ஏரியின் நீர்மட்டம் 7 அடி உயர்ந்து உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில் தற்போது 30.30 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்த 1-ந்தேதி பூண்டி ஏரியின் நீர்மட்டம் 23.30 அடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. இதில் 1810 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. 27 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இல்லாததால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 209 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 412 கனஅடியும் தண்ணீர் வருகிறது.