என் மலர்
தமிழ்நாடு
'கடவுளே அஜித்தே' கோஷம்.. நானும் அஜித் ரசிகர்தான் - டிடிவி தினகரன் கொடுத்த நச் பதில்
- டிடிவி தினகரன் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
- ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன்
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே அஜித்தே" என்று கூறி வருகின்றனர். இந்த கோஷம் சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரிசுகளை வழங்கினார். அப்போது நிகழ்ச்சியில், மாணவர்களில் ஒரு தரப்பினர் 'கடவுளே அஜித்தே' என கோஷம் எழுப்பினர்
இதனால், டிடிவி தினகரன் ஒருநிமிடம் பேச்சை நிறுத்திவிட்டு, மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என நிர்வாகிகளிடம் கேட்டார். பிறகு கோஷம் ஓய்ந்தபிறகு பேச்சை தொடர்ந்தார்.
இதனையடுத்து கடவுளே அஜித்தே என்று பொது இடங்களில் கோஷம் போடுவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்று அஜித் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், "திருப்பூர் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கொடுக்க சென்றிருந்தேன். அப்போது நான் பேச தொடங்கியபோது அங்கிருந்த பள்ளி மாணவர்கள் கோஷமிட்டனர். எனக்கு அந்த கோஷம் தெளிவாக கேட்கவில்லை. உடன் பக்கத்தில் இருந்தவர்களிடம் என்ன கோஷம் போடுகிறார்கள் என்று கேட்டேன். கடவுளே அஜித்தே என்று கோஷம் போடுவதாகவும் இது தற்போது ட்ரெண்டாகி வருவதாகவும் கூறினார்கள்.
நானும் அஜித்தினுடைய ரசிகன் தான். ஒரு நடிகரா அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நானே பல பேட்டிகளில் கூறியுள்ளேன். பல குழந்தைகளுக்கு நான் அஜித்குமார் என்றே பெயர் வைத்துள்ளேன்.
நல்ல படங்களை பார்ப்பேன். தற்போது கூட தங்கலான் திரைப்படம் ஓடிடி-யில் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. கங்குவா திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை" என்று தெரிவித்தார்.