search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கோட்டையன் அ.தி.மு.க.விற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார்- கே.பி.முனுசாமி
    X

    செங்கோட்டையன் அ.தி.மு.க.விற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார்- கே.பி.முனுசாமி

    • செங்கோட்டையன் அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர்.
    • முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.

    கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அண்ணன் செங்கோட்டையன் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

    புரட்சித் தலைவர் மறைவிற்கு பின்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த இயக்கத்தை தலைமை ஏற்று வழிநடத்தியபோது, இயக்கத்திற்கு ஒரு தளபதியாக செயலாற்றியவர். அரசியலில் மிகப்பெரிய அனுபவம் கொண்டவர். அரசியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். அவர் உழைப்பிற்கு ஏற்ப புரட்சித் தலைவி உயர்ந்த பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார்.

    புரட்சித் தலைவி அவரை எந்தளவிற்கு மதிப்போடும், மரியாதையோடும் வழி நடத்தினார்களோ அதேபோல் இன்றளவில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார், மூத்த தலைவராக இருக்கக்கூடிய செங்கோட்டையன் அவர்களை மதித்து அழைத்து செல்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அண்ணன் செங்கோட்டையனை பொறுத்தவரை இந்த இயக்கத்தோடு ஒன்றிணைந்து இருப்பவர். அவரோடு அந்த மாவட்டத்தில் இருந்த முத்துசாமிக்கு சில சோதனைகள் வந்தபோது இந்த இயக்கத்தை காட்டிக்கொடுத்துவிட்டு எதிரணிக்கு சென்று இன்று அமைச்சராக இருக்கிறார்.

    ஆனால் அதே மாவட்டத்தில் இருக்கின்ற தலைவர் செங்கோட்டையன், பல்வேறு சோதனைகளை சந்தித்தாலும் நம்முடைய உழைப்பால் இந்த இயக்கம் வளர்ந்திருக்கிறது என்ற சிந்தனையோடு இந்த இயக்கத்திற்கு கடைசி வரை உறுதுணையாக இருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    அ.தி.மு.க. என்ற இயக்கம் முழுமையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் உள்ளது. அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட எந்த உரிமையும் இல்லை.

    பொதுச்செயலாளர் இ.பி.எஸ். குறித்து பேசுவதற்கு எந்தவித தகுதியும் தார்மீக உரிமையும் டிடிவி தினகரனுக்கு இல்லை. அரசியல் ரீதியாக, எதிர்க்கட்சியாக விமர்சிக்கலாம். எங்களுடன் இணைவோம் என சொல்வதற்கு டி.டி.வி. தினகரனுக்கு உரிமையில்லை.

    நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் பாதுகாப்புக்காக Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டிருந்தால் மகிழ்ச்சி. அரசியல் ரீதியாக த.வெ.க. தலைவர் விஜயை தன்பக்கம் இழுப்பதற்காக Y பிரிவு பாதுகாப்பு தரக்கூடாது என்று கூறினார்.

    Next Story
    ×