என் மலர்
தமிழ்நாடு
தெலுங்கு மக்களை எப்படி பிரித்துப் பார்க்க முடியும்?: கஸ்தூரிக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி
- கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
- அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர்மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.
இதற்கிடையே, மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில் கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தெலுங்கு மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான். அவர்களை எப்படி பிரித்துப் பார்க்க முடியும்? கஸ்தூரியின் பேச்சை இணைய தளத்தில் இருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும், அரசியல் உள் நோக்கத்தோடு என் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன் என கஸ்தூரி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது. பிறருக்கு இது ஒரு பாடமாக அமையும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முன் ஜாமின் வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.