என் மலர்
தமிழ்நாடு

என் 2 மகன்களும் பள்ளிப்படிப்பை இருமொழியில்தான் படித்தார்கள்- அண்ணாமலைக்கு பி.டி.ஆர். பதில்
- 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
- இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது.
மதுரை:
மத்திய அரசி்ன் மும்மொழி கொள்கையை கண்டித்து மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-
மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால்தான் உங்களுக்கு நிதியை கொடுப்போம் என மத்திய அரசு கூறுகிறது. உத்தரபிரதேசத்தில் கிட்டத்தட்ட 60 சதவீதம் மாணவர்கள் இந்தியில்கூட தேர்வை எழுத முடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு மொழிக்கொள்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை. கொரோனா காலத்துக்கு பின்பு, இல்லம் தேடிக்கல்வி முயற்சியை வேறு எந்த மாநிலம் எடுக்காத நிலையில் நம் மாணவர்களுக்கு, குழந்தைகளின் முன்னேற்றத்தை கருதி முயற்சி எடுத்தோம்.
இருக்குற 2 மொழிக்கொள்கையை சிறப்பிக்க முயற்சிகள் எடுக்கும்போது, அதை விட்டுட்டு மூன்றுக்கு செல்வது சரியா?
தமிழ்நாட்டில் பல பத்தாயிரம் பள்ளிகளில் பல லட்சம் மாணவர்கள். கல்வி பெற்று வருகிறார்கள். இதில் கூடுதல் மொழியை கட்டாயப்படுத்தி திணித்தால், எத்தனை ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நமக்கு தேவை. எத்தனை பத்தாயிரம் மணி நேரங்கள் இல்லை; லட்சம் மணி நேரங்கள் அவங்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த மொழியை சொல்லிக் கொடுக்க வேண்டியதுவரும். இதற்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் தேவை. எத்தனை கூடுதல் கட்டிடங்கள், வகுப்பறைகள். தேவைப்படும். இதற்கெல்லாம் யார் செலவு செய்வார்கள்?
கொள்கை என்று நீங்கள் எழுதி கொடுக்கிறீர்கள். செயல்படுத்த வேண்டியது நாங்கள். இன்றைக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. 3 மொழிக்கொள்கையை கொண்டு வந்தால் கல்வியில் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
இதில் அமைச்சர் பசங்க எங்க படிக்கிறாங்க... அமைச்சர் பேரங்க எங்க படிக்கிறாங்க.... என்கிறார்கள். அமைச்சர்கள் 34 பேரோட பசங்க எங்க படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. 8 கோடி மக்களுக்கு என்ன கல்வித்திட்டம் என்பதுதான் முக்கியம். எந்த வாதத்தையும் தனிநபருக்காக திசை திருப்ப முயற்சிப்பது சரியல்ல. அவ்வாறு செய்தால் வாதத்தை திசை திருப்புகிறார்கள் என்று நாம் எண்ண வேண்டும். ஆனாலும் நான் ஒரு உண்மையை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு கட்சித் தலைவர் (அண்ணாமலை), எதோ ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பசங்க எத்தனை மொழி படித்தார்கள்? என சொல்லட்டும் எனக்கேட்டுள்ளார்.
நான் தெளிவாக விளக்கம் சொல்கிறேன். எனக்கு 2 புதல்வர்கள். என் அப்பா பெயரை 2 பேருக்கும் பிரித்து வைத்துள்ளேன். ஒருவர் பழனி, இன்னொருவர் வேல்.
எல்.கே.ஜி. முதல் பள்ளிப்படிப்பை முடிக்கிற வரை இருமொழி கொள்கை படிதான் இருவரும் படித்தார்கள். யாருக்கெல்லாம் விளக்கம் தேவையோ எடுத்துக்கொள்ளட்டும்.
இந்தி பிரசார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ளது. அதற்கு மேல் திருச்சியில் ஒரு அலுவலகத்தை வைத்து எங்கெங்கெல்லாம் எப்ப எல்லாம் முடியுமோ மத்திய அரசாங்க நிதியை வைத்து இந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை நாங்கள் தடை செய்யவில்லை. தமிழகத்துக்கு இருமொழி கொள்கைதான் சரி.
இவ்வாறு அவர் பேசினார்.