search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீசில் தஞ்சம் அடைய வந்த காதல் ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்- தாலியை அறுத்து எறிந்ததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    போலீசில் தஞ்சம் அடைய வந்த காதல் ஜோடிக்கு நிகழ்ந்த கொடூரம்- தாலியை அறுத்து எறிந்ததால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர்.
    • வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    ஆரணி:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி தமிழ் பிரியா. தம்பதியின் மகள் பூஜா (வயது 21). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 முடித்தார்.

    இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் சேர்ந்து நர்சிங் படித்தார். இதற்காக கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் உள்ள அவருடைய பெரியம்மா வீட்டில் தங்கி இருந்தார்.

    அதே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சரண்ராஜ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரண்ராஜ் பெயிண்டர் வேலை மற்றும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். தன்னைவிட 2 வயது குறைவான வாலிபராக இருந்தாலும் சரண்ராஜ் மீது பூஜாவுக்கு காதல் மலர்ந்தது.

    அடிக்கடி தனிமையில் பேசி தங்களுடைய காதலை வளர்த்து வந்தனர். இந்த விவகாரம் பூஜாவின் பெற்றோருக்கு தெரிந்தது. தன்னுடைய மகள் படிப்பை கூட பார்க்காமல் பூஜாவை கும்மிடிப்பூண்டிக்கு அழைத்துச் சென்று விட்டனர். காதலனிடம் இருந்து தன்னை பிரித்து விட்டதால் பூஜா மனமுடைந்து காணப்பட்டார். எப்படியாவது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரண்ராஜ், பூஜா வீட்டை விட்டு வெளியேறினர். மகள் காணாமல் போனதாக தமிழ் பிரியா கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜாவை தேடி வந்தனர்.

    வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். காதலனை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இனி தங்கள் காதலுக்கு எதிர்ப்பு ஏற்படாது என்ற நினைப்பில் இருவரும் கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ் முகாமுக்கு வந்தனர்.

    இதற்கிடையே போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பூஜா காதலனுடன் பாதுகாப்பு கேட்டு ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த பூஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணிக்கு வந்தனர்.

    அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு 10 மீட்டருக்கு முன்பாக உள்ள ஒரு கோவில் அருகே மடக்கினர்.

    காரில் இருந்து காதல் ஜோடி இருவரையும் வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர்.

    சத்தம் கேட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலிருந்து போலீசார் வெளியே வந்தனர். அவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். பூஜாவின் உறவினர்கள் சரண்ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் பூஜாவின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அடித்தனர். அவருடைய தாய் தமிழ் பிரியா பூஜாவின் கழுத்தில் கிடந்த தாலியை அறுத்து வீசினார்.

    போலீசார் கண்முன்னே சரண் ராஜை அடித்து தள்ளிவிட்டு பூஜாவை காரில் அழைத்து சென்றனர். காதல் மனைவியை மீட்க முடியாமல் சரண்ராஜ் அழுது துடித்தார். சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் சில நிமிடங்களில் அரங்கேறி விட்டது.

    பூஜாவை கஸ்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

    காதல் கணவனிடம் இருந்து பிரித்ததால் பூஜா மனம் உடைந்தார். வாழ்வில் விரக்தி அடைந்த அவர் உடல் முழுவதும் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவருடைய உடலில் தீப்பற்றி எரிந்தது. வலியால் அலறி துடித்தார். அவருடைய குடும்பத்தினர் தீயை அணைத்து அவரை வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் 70 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டதாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த பூஜாவின் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பூஜா நேற்று பரிதாபமாக இறந்தார்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு பூஜாவின் உடல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து களம்பூர் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரணி அனைத்து மகளிர் போலீசார் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. இந்த காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர். நெஞ்சை பதற வைத்த இந்த காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் நடந்தது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம் அவர்கள் வரவில்லை நாங்கள் என்ன செய்வது என அனைத்து மகளிர் போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்தவிதமான தகவலும் தங்களுக்கு வரவில்லை என ஆரணி டவுன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் காதல் ஜோடி தாக்கப்படுவதை தடுத்து இருந்தால் இளம்பெண் உயிரிழப்பு நடந்திருக்காது இது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    காதல் திருமணம் செய்த இளம்பெண் அணிந்து இருந்த தாலியை கழட்டி வீசிய காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிரிக்கப்பட்ட காதலி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த சரண்ராஜ் விரக்தியில் உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×