என் மலர்
தமிழ்நாடு

ரவுடி வசூல்ராஜா கொலையில் கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேர் கைது

- கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது. கொலை திட்டத்தை அரங்கேற்றிய பின்னர் கொலையாளிகள் அங்குள்ள தெருக்கள் வழியாக தப்பி செல்லும் வீடியோ காட்சி பதிவாகி இருந்தது.
இதனை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து ரவுடி வசூல்ராஜா கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரவுடி வசூல்ராஜா 2 கல்லூரி மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பெண் தொடர்பாகவும் அவர் பிரச்சனையில் ஈடுபட்டு உள்ளார். இந்த தகராறில் கொலை செய்ததாக பிடிபட்டவர்கள் கூறியதாக தெரிகிறது.
ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு வெடிகுண்டு எப்படி கிடைத்தது? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அவர்களுக்கு பின்னால் ரவுடி கும்பல் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் மறைவுக்கு பின்னர் அவரது இடத்தை பிடிக்க ரவுடிகளிடையே தொடர்ந்து மோதல் மற்றும் கொலைகள் அரங்கேறி வந்தன. எனவே ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு அல்லது வசூல் ராஜாவால் தீர்த்து கட்டப்பட்டவர்களின் கூட்டாளிகள் திட்டமிட்டு இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிபட்டவர்களிடம் முழுமையாக விசாரணை முடிந்த பின்னரே வசூல்ராஜாவின் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.