search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும்: சத்குரு
    X

    ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும்: சத்குரு

    • ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் கோவையில் இன்று நடைபெற்றன.
    • ஐ.பி.எல்.லை விட பெரியது கிராமோத்சவம் என்றனர் சேவாக், வெங்கடேஷ் பிரசாத்

    கோவை:

    ஈஷா சார்பில் பாரதத்தின் மாபெரும் விளையாட்டு திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப்போட்டிகள் சத்குரு முன்னிலையில் இன்று கோவையில் கோலாகலமாக நடைபெற்றது.

    கோவை ஆதியோகி முன் நடைபெற்ற இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வெங்கடேஷ் பிரசாத், பாரா ஒலிம்பிக் வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு, துளசிமதி மற்றும் பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.

    இந்த விழாவில் சத்குரு பேசியதாவது:

    ஒரு காலத்தில் 100 சதவீத கல்வி பெற்றதாக இருந்த நாடு, விடுதலை பெறும்போது 93 சதவீதம் கல்வியறிவு இல்லாத நாடாக மாறி இருந்தது. இது வெறும் 300 ஆண்டுகளில் நடைபெற்றது.

    ஆனால் கடந்த 75 வருடங்களில் நாம் மகத்தான பல விஷயங்களைச் செய்துள்ளோம். புத்திசாலித்தனம், உறுதி, திறமை போன்ற பல அம்சங்கள் நம் வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் நமக்காக செயல்பட வேண்டும் என்றால் நாம் புத்துணர்வாக, உற்சாகமாக இருக்க வேண்டும். நீங்கள் புத்துணர்வாக இல்லை என்றால் எவ்வளவு பணம், சொத்து, திறமை இருந்தாலும் உங்களால் எதையும் உருவாக்க முடியாது. அந்த வகையில் கிராமங்களில் புத்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கிராமோத்சவம் நடத்தப்படுகிறது.

    எளிமையாக துவங்கப்பட்ட இந்த கிராமோத்சவம் 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்குபெறும் பெரிய விழாவாக இன்று மாறி உள்ளது. ஆனால் இது போதாது. ஈஷா கிராமோத்சவம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த விழாவில் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியதாவது:

    மனித நல்வாழ்விற்காக சத்குரு செய்து வரும் மகத்தான பணிக்கு என் வணக்கங்கள். கிராமோத்சவம் திருவிழாவின் நோக்கம், தீவிரம் அனைத்தையும் பார்க்க ஆனந்தமாக இருக்கிறது. ஆயிரக்கணக்கான கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தி மகத்தான விளையாட்டுத் திருவிழாவாக இது நடந்து இருக்கிறது. இதற்கு சத்குருவிற்கு என் நன்றிகள். நீங்கள் வாழ்வதற்காக எதை செய்தாலும், விளையாட்டிற்காக தினமும் 10 - 15 நிமிடங்கள் செலவிடுங்கள்.

    விளையாட்டு என்பது மகத்தான ஆசிரியர், அது குழுவாக இணைந்து செயல்படுவதை, எதிர்த்துப் போராடுவதை, இக்கட்டான சூழலில் இருந்து வெளியேறுவதை, தோல்வியிலிருந்து மீண்டு எழுவதை என வாழ்வின் பல அம்சங்களை நமக்கு கற்றுத் தருகிறது என கூறினார்.

    பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் பேசுகையில், காஞ்சிபுரத்தில் இருந்து தினக்கூலிக்கு பிறந்த பெண்ணால் சாதிக்க முடியும் என்றால் உங்களாலும் சாதிக்க முடியும். பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்க சத்குரு ஊன்றுகோலாகத் திகழ்கிறார். நான் ஏராளமான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு எழுந்த மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வர சத்குருவின் உத்வேக வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது என்றார்.

    கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பேசுகையில், ஐ.பி.எல். போட்டிகளை ஒருங்கிணைப்பது கூட எளிதானது. இது போன்ற கிராமங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதுதான் கடினமானது. இதனை செய்யும் ஈஷாவிற்கும் சத்குருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.


    வாலிபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் பனகல் கிராமத்தைச் சேர்ந்த அலிப் ஸ்டார் அணி வென்று முதல் இடம் பிடித்தது. இரண்டாம் இடத்தை உடுப்பி மாவட்டம் பள்ளிகிராமத்தைச் சேர்ந்த பள்ளி பிரண்ட்ஸ் அணி பிடித்தது.

    அதேபோல் பெண்களுக்கான த்ரோபால் இறுதிப்போட்டியில் கர்நாடக மாநிலம் மார்கோடு கிராமத்தைச் சேர்ந்த அணி வென்று முதல் இடத்தை பெற்றது. இரண்டாம் இடத்தை தமிழ்நாட்டில் இருந்து புள்ளாக்கவுண்டன் புதூர் கிராம அணி பிடித்தது

    மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட வாலிபால் போட்டிகளை பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் துவங்கி வைத்தார். இதில் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் இடத்தை கோவை அணியும், இரண்டாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் வென்றன.

    16-வது ஈஷா கிராமோத்சவ இறுதிப்போட்டியில் முதல் இடத்தை பிடித்த அணிகளுக்கு 5 லட்சமும், 2-ம் இடத்தைப் பிடித்த அணிகளுக்கு 3 லட்சமும், 3 மற்றும் 4-ம் இடத்தை பிடித்த அணிகளுக்கு தலா 1 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    முன்னதாக, ஈஷாவுடன் இணைந்து யுவா கபடி லீக் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

    அதேபோல், ஈஷாவுடன் இணைந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் அசோசியேஷன் நடத்திய சூப்பர் ஓவர் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டியில் 150 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சேவாக் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் வழங்கப்பட்டது. சிலம்பம் போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வயது அடிப்படையில் 6 பிரிவுகளில் கலந்துகொண்டனர்.

    இதனுடன் தென்னிந்திய மாநிலங்களின் பாரம்பரிய கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில் தமிழ்நாடு சார்பில் பறையாட்டம் மற்றும் தவில், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சிகளும், கர்நாடகா சார்பில் பிலி வேசா எனும் புலி நடனமும், தெலுங்கானா சார்பில் கோண்டு பழங்குடிகளின் குசாடி நடனமும், கேரளா சார்பில் செண்ட மேளம் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் பஞ்சரி மேளம், 1000 பேர் கலந்துகொண்ட வள்ளி கும்மி, 500 பேர் பங்கேற்ற ஒயிலாட்டம், 1,500 பேர் பங்கேற்ற கோலப் போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றன.

    Next Story
    ×