என் மலர்
தமிழ்நாடு
மோதுவோம் என்றாகிவிட்டது... வா மோதுவோம்... வருண்குமார் ஐபிஎஸ்-க்கு சீமான் சவால்
- விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது.
- எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.
கோவை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியை நடத்தி வருகிறோம். தேர்தலில் நின்று 36 லட்சம் வாக்குகளை பெற்று, மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது.
ஆனால் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐ.பி.எஸ். எதனை வைத்து நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாத இயக்கம் என்று சொல்கிறார். அடிப்படை தகுதி இல்லாமல் எப்படி அவர் ஐ.பி.எஸ். ஆனார். தமிழ், தமிழர் என்பது எப்படி பிரிவினைவாதம் ஆகும். எங்கள் கட்சியை குறை சொல்லத்தான் ஐ.பி.எஸ். படித்தாரா? மோதுவோம் என்றாகி விட்டது. வா மோதுவோம்.
நடிகர் விஜய் மக்களுக்கு உதவ நினைப்பதை குறை சொல்ல முடியாது. எப்போதும் குறை சொல்லிக் கொண்டிருக்க நாங்கள் மன நோயாளி அல்ல.
தமிழகத்தில் இதுவரை பாதித்த புயல் பாதிப்புகளுக்கு, மத்திய அரசு இதுவரை உதவி செய்யவில்லை. மாநிலங்கள் தரும் வரியை எடுத்து வைத்துக் கொண்டு, பேரிடர் காலங்களில் கூட மத்திய அரசு உதவுவது இல்லை. குஜராத், பீகார் மாநில வெள்ள பாதிப்பிற்கு உடனே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இதுபற்றி கேள்வி கேட்டால் ஆன்ட்டி இந்தியன் என்கிறார்கள்.
அசாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கேவலமானது. 28 விழுக்காடு மக்கள் இரவு உணவு இல்லாமல் உறங்க செல்கிறார்கள். சொந்த நாட்டு மக்களின் உணவை உறுதி செய்ய வேண்டும். உணவு, உடை என்பது அவரவர் உரிமை. மாடு புனிதம் என்றால், எதற்காக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.