search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தென்பெண்ணையில் ஆற்றுத் திருவிழா - சாமிகளுக்கு தீர்த்தவாரி
    X

    தென்பெண்ணையில் ஆற்றுத் திருவிழா - சாமிகளுக்கு தீர்த்தவாரி

    • இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது.
    • பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பொங்கல் பண்டிகை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இன்று மாவட்ட முழுவதும் ஆற்று திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம் தென்பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர், வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சையாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன.

    மஞ்சக்குப்பம் நேதாஜி சாலை பகுதியில் பக்தர்கள் சாலையோரங்களில் நின்று சாமிகளை வழிபட்டனர். சாமிகளுக்கு பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.

    கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடி சாமி கும்பிட்டனர். ஆற்றுத் திருவிழாவில் மட்டுமே கிடைக்கும் சுருளி கிழங்கினை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    ஆற்று திருவிழாவின்போது பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வரும். ஆனால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இது மட்டுமின்றி ஆறுகளில் தண்ணீர் உள்ளதால் அந்த பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதித்த நிலையில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    இந்த ஆற்றுத் திருவிழாவில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.

    ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×