என் மலர்
தமிழ்நாடு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்- திருமாவளவன்
- ஆதவ் அர்ஜூன் தற்காலிக நீக்கத்திற்கு பிறகாவது பொது இடங்களில் கருத்துக்கள் கூறாமல் இருக்க வேண்டும்.
- கால்நடைகள், இதர பொருள்களில் சேதங்களுக்கு ஏற்ப நிதி உதவி உயர்த்தி வழங்க வேண்டும்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பார்க்கிறார்கள். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய உறுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தார்கள் . அதுவும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல் சமூக நீதிப் கோட்பாட்டுக்கு எதிரான தாக்குதல் அதேபோல வழிபாட்டு தளங்களுக்கான சட்டம் 1948 இல் வந்தது.
அந்த சட்டத்தை பொருட்படுத்தாமல் அதனை அவமதிக்கிறார்கள் ராமர் கோவில் கட்டியது இதற்கு ஒரு முன்னுதாரணம். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருக்கிற சோசியலிசம் செக்யூலரிசம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பாஜக கட்சியைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்தார்.
இப்போது அதே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1948 நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள் பாஜக கட்சியை சார்ந்தவர்கள். அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல்.இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இதுவும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
ஒருபுறம் புரட்சியாளர் அம்பேத்கரையும், அரசமைப்பு சட்டத்தையும் புகழ்ந்து கொண்டு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதலை பா.ஜ.க. நடத்திக் கொண்டிருக்கிறது . தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து இந்த ஆபத்தை தடுக்க வேண்டும்.
அரசமைப்பு சட்டம் குறித்த விவாதத்தில் இது குறித்த கருத்துக்களை பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் அனுமதிக்கவில்லை . ஆதவ் அர்ஜூன்
நீக்கம் குறித்து யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. முதலமைச்சரை அடிக்கடி நேரில் சந்திக்க முடியாது என்ற காரணத்தினால் தான் அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்து பேசினேன்.
ஆதவ் அர்ஜூன் தற்காலிக நீக்கத்திற்கு பிறகாவது பொது இடங்களில் கருத்துக்கள் கூறாமல் இருக்க வேண்டும். தொடர்ந்து பேசி வருவது தவறு.
தமிழகத்தில் மழை வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். முதல்வரை சந்தித்தபோதும் இதனை வலியுறுத்தினோம்.
கால்நடைகள், இதர பொருள்களில் சேதங்களுக்கு ஏற்ப நிதி உதவி உயர்த்தி வழங்க வேண்டும். இதற்கு சட்ட வழிகாட்டுதல் இருக்கிறது அதற்கான அரசாணை இருக்கிறது அதை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.