என் மலர்
தமிழ்நாடு
திருவண்ணாமலை மண் சரிவு - அதிர்ச்சியூட்டும் வீடியோ
- சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
- 12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. கடந்த 1-ந்தேதி காலை தொடங்கி விடாமல் மழைக் கொட்டியது. திருவண்ணாமலை வ.உ.சி.நகர் பகுதியில் மகாதீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து பெரிய பாறை உருண்டது.
அதனை தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் முற்றிலுமாக சிக்கிக் கொண்டது. அதில் ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனால் மற்றொரு வீடு கண்ணிமைக்கும் நேரத்தில் மண் சரிவில் முழுமையாக மூடியது. அதோடு பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
அந்த வீட்டுக்குள் இருந்த கூலித் தொழிலாளி ராஜ்குமார் (வயது 32) அவருடைய மனைவி மீனா (26) மற்றும் அவர்களது மகன் கவுதம் (9) மகள் இனியா ( 7) உறவினர்களான சுரேஷ் என்பவரது மகள் மகா (12) சரவணன் மகள் ரம்யா (12) மஞ்சுநாதன் மகள் வினோதினி (14) ஆகிய 7 பேரும் மண்சரிவில் சிக்கினர். அவர்கள் வீட்டுக்குள் உயிரோடு புதைந்து சமாதியானார்கள்.
இதனைக்கண்டு பதறிய அந்த பகுதி பொதுமக்கள் போலீசார், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் 30 பேர் மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உட்பட 200 பேர் மீட்பு பணியில் களமிறங்கினர். மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணி நடந்தது.
சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ஆனாலும் சேறும் சகதியுமாக வீட்டின் மீது குவிந்து கிடந்த மண்ணையும் பாறை கற்களையும் அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பெரிய பொக்லைன் எந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை.
இதை தொடர்ந்து சிறிய பொக்லைன் எந்திரத்தை குறுகலான பாதையின் வழியே செங்குத்தாக படிப்படியாக கொண்டு செல்லும் முயற்சி நடந்தது. அதனை வைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
இதில் ஒரு உடல் மண்ணில் ஆழத்தில் சிக்கியிருந்ததால் வெளியே எடுக்க முடியவில்லை. அதனை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த உடல் மீட்கப்பட்டது.
மேலும் 2 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை நிலச்சரிவு குலைநடுங்கவிடும் புதிய CCTV #Thiruvannamalai #CCTV #ThanthiTV pic.twitter.com/lkYdic3RNy
— Thanthi TV (@ThanthiTV) December 3, 2024