என் மலர்
தமிழ்நாடு

தேர்தல் பரப்புரையில் வன்முறை பேச்சு- சீமான் மீது வழக்குப்பதிவு

- தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
- நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க. சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலை அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமார் உதயசூரியன் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மைக் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக, நாதக வேட்பாளர்கள் மட்டுமல்லாது சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
சீமான் பேசுகையில், உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. என் தலைவனிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை என் மீது வீசு, நான் வெடிகுண்டை உன் மீது வீசுவேன்.
வெடிகுண்டை வைத்திருக்கிறேன், இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என்று பேசி உள்ளார்.
இதனையடுத்து, தேர்தல் பரப்புரையில் சீமான் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.