என் மலர்
தமிழ்நாடு
பல்லாவரத்தில் குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு- 6 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு
- சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
தாம்பரம்:
பல்லாவரம், காமராஜர் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டுக்கு உட்பட்ட முத்து மாரியம்மன்கோவில் தெரு, மாரியம்மன்கோவில் தெரு, மலை மேடு பகுதிகளில் வசிக்கும் 40-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரியிலும், தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். இதில் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மாங்காடு பகுதியை சேர்ந்த திருவேதி(56), மோகனரங்கம் (42) ஆகியோர் இறந்தனர். இதேபோல் கண்டோண்மெண்ட் பல்லாவரம், மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வரலட்சுமி (88) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவர்களது இறப்புக்கு குடிநீரில் கழிவுநீர் கலந்ததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, தண்ணீரை குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை. அவர்கள் உட்கொண்ட உணவு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் 31 பேர் சிகிச்சைபெற்ற நிலையில் இன்று காலை அவர்களில் 6 பேரின் உடல் நிலை சீரானது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு திரும்பினர். 25 பேருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 4 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுமக்கள் பயன் படுத்திய குடிநீரின் தன்மையை அறிய 5 இடங்களில் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பரிசோதனை முடிவு வெளிவர 3 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது.
இதற்கிடையே பாதிப்பு ஏற்பட்ட பல்லாவரம் காமராஜ் நகர், கண்டோண்மெண்ட் பல்லாவரம் 6-வது வார்டு பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தெருக்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும் வீடு, வீடாக சுகாதார ஊழியர்கள் சென்று பாதிப்பு ஏதேனும் உள்ளதா? என்று கணக்கெடுத்தனர்.
குடிநீர் வரும் குழாய்கள் முழுவதும் சோதனை செய்யப்பட்டது. இதில் எந்த இடத்திலும் உடைப்பு இல்லை. மேலும் குடிநீர் வினியோகிக்க தேக்கி வைக்கப்படும் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு லாரிகள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
உடல்நலம் பாதிப்பு இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த குடிநீரின் தரத்தை மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் இன்று காலை பரிசோதித்து ஆய்வு செய்தார். இதேபோல் அங்குள்ள குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரும் பரிசோதிக்கப்பட்டது. அப்போது மண்டலக்குழுத்தலைவர் ஜோசப்அண்ணாத்துரை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.