search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதல் கலப்பு திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உள்பட 6 பேர் கைது
    X

    காதல் கலப்பு திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர் உள்பட 6 பேர் கைது

    • தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி செட்டிமாங்குறிச்சி கிராமம், சின்னதாண்டவனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தனுஷ் கண்டன் (25). இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலை பார்த்த தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சின்னம்பள்ளி கிராமம் தோழுரை சேர்ந்த குமாரசெல்வம் என்பவரது மகள் ரோஷினி (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் நட்பு காதலாகி அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பிறகு காதல் ஜோடி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருமண வயதினை எட்டியிருந்ததால், இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரோஷினியை அவரது காதல் கணவர் தனுஷ்கண்டனுடன் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் எடப்பாடி அடுத்த சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று மாலை தனுஷ்கண்டன் வீட்டிற்கு சொகுசு காரில் வந்த இறங்கிய கும்பல் கையில் பட்டா கத்தியுடன் அதிரடியாக தனுஷ் கண்டன் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த ரோஷினியை வலுக்கட்டாயமாக கதற கதற காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றனர். மேலும் அதனை தடுக்க வந்த அப்பகுதி மக்கள் மற்றும் தனுஷ்கண்டன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பட்டாக்கத்தியை காட்டி மிரட்டிய கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் ரோஷினியை காரில் கடத்தி சென்றது.

    இதுகுறித்து தனுஷ்கண்டன் அளித்த புகாரின் பேரில் எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசாரின் விசாரணையில் ரோஷினியை கடத்திச் சென்ற கும்பல் ஈரோடு மாவட்டத்தில் பதுங்கி இருப்பது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள டி.எஸ். பாளையத்தில் பதுங்கி இருந்த கும்பலை நேற்று நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்தனர். மேலும் அப்பகுதியில் வெங்கடாஜலம் என்பவர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரோஷினியை மீட்டனர்.

    மேலும் இந்த கடத்தல் தொடர்பாக ரோஷினியின் தந்தை குமாரசெல்வம், தாய் சித்தரா மற்றும் அவரது சகோதரி சவுமியா, உறவினர் லட்சுமணன், ஜோதிடர் கருப்பண்ணன், வெங்கடாசலம் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து எடப்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் வழக்கில் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடத்தப்பட்ட ரோஷினி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை எடப்பாடி போலீஸ் நிலைய பெண் போலீசார் செய்து வருகின்றனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னரே இக்கடத்தலில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து விபரம் தெரியவரும்.

    Next Story
    ×