என் மலர்
உலகம்
இஸ்ரேல் நடத்திய அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 195 பேர் பலி: ஹமாஸ் அமைப்பு தகவல்
- காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- இந்தத் தாக்குதலில் 195 பேர் பலியானதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசா:
இஸ்ரேலுக்கும்-பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தீவிரம் அடைந்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காசாவில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இதற்கிடையே காசாவில் உள்ள மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபாலியா முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்புகள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அகதிகள் முகாம் மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதற்கிடையே, ஜபாலியா முகாம் மீது 2-வது நாளான நேற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் வீடுகளுக்குள் இருந்தவர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 195 பேர் பலியாகி உள்ளதாக காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 777 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 120 பேரை காணவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜபாலியா அகதிகள் முகாம் மீது கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.