என் மலர்
உலகம்

"ஏலியன்கள் நாடுகடத்தல்" - சங்கிலி பூட்டி அழைத்துச் செல்லும் வீடியோவை வெளியிட்ட வெள்ளை மாளிகை

- "ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் வெள்ளை மாளிகை வீடியோ வெளியிட்டுள்ளது.
- எலான் மஸ்க் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அந்நாட்டில் ஆவணமின்றி சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவரை நாடு கடத்தி வருகிறது. கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ ஆகிய லத்தீன் அமெரிக்க மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து நாடுகடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோரும் மூன்று கட்டங்களாக ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் கைகளை விலங்கிட்டு, கால்களை சங்கிலியால் பிணைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு சிரமமப்படும்படி அமெரிக்கா கீழ்த்தரமாக நடத்தி நாடுகடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்கள் நாட்டவரை அவமதித்தாக பிரேசில் அமேரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்தது. ஆனால் இந்தியா கண்டனம் தெரிவிக்காமல் மாறாக அமெரிக்காவோடு மேலும் நட்பு பாராட்டுவதைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் நாடு கடத்தப்பட்டவர்கள் எவ்வாறு சங்கிலி மற்றும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர் என்பதை விளக்கும் விதமாக அமெரிக்க வெள்ளை மாளிகை ASMR வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
"ASMR: சட்டவிரோத ஏலியன்கள் நாடுகடத்தல் விமானம்" என்ற தலைப்பில் 40 வினாடி வீடியோவை வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அறிக்கைப்படி சியாட்டில் நகரில் இருந்து புறப்படும் அந்த விமானத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
வீடியோவில், அதிகாரிகள், நாடுகடத்தப்படுபவர்களை சங்கிலியால் பிணைப்பது, அவர்கள் (கைதிகள்) காலில் பிணைந்த சங்கிலிகளுடன் விமானத்தில் ஏறுவது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ASMR: Illegal Alien Deportation Flight ? pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025
அமெரிக்கா பிறநாட்டவரை கீழ்தரமாக நடத்தும் இந்த வீடியோ சர்வதேச அளவில் கண்டனங்களை குவித்து வருகிறது. இதற்கிடையே உலக பணக்காரரும், அதிபர் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான எலான் மஸ்க், தனக்கு சொந்தமான எக்ஸ் தளத்தில், தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து "ஹாஹா வாவ்" என்று பதிவிட்டுள்ளார்.