search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்க பொருட்கள் மீது வரியை தீட்டிய சீனா.. டிரம்புக்கு பதிலடி - மத்தியில் சிக்கிய கூகுள் நிறுவனம்
    X

    அமெரிக்க பொருட்கள் மீது வரியை தீட்டிய சீனா.. டிரம்புக்கு பதிலடி - மத்தியில் சிக்கிய கூகுள் நிறுவனம்

    • ஆனால் சீனாவுக்கான 10 சதவீத வரியில் மாற்றம் இல்லை
    • கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.

    அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டார்.

    இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டார். நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்தது.

    இதற்கிடையே கனடாவும் அமெரிக்க பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தது. தொடர்ந்து கனடா, மெக்சிகோ தலைவர்களுடன் போனில் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு நாடுகளுக்கான வரிவிதிப்பு உத்தரவை அடுத்த ஒரு மாதத்துக்கு மட்டும் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.

    ஆனால் சீனாவுக்கான 10 சதவீத வரியில் மாற்றம் இல்லை. எனவே தற்போது அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.

    சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி, திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு உள்ளிட்டவற்றிக்கு 15 சதவீத வரியும், விவசாய உபகரணங்கள், கச்சா எண்ணெய் மீது கூடுதலாக 10 சதவீத வரியும் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அமெரிக்காவுக்கு அரிய உலோகங்களை ஏற்றுமதி செய்வதற்கும் சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் ஏகபோக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த சீனா அரசு உத்தரவிட்டுள்ளது.

    முன்னதாக அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் வழக்கு தொடரப்படும் என சீனா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×