search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு: அபராதம், நிபந்தனை ஏதுமின்றி தண்டனையில் இருந்து டிரம்ப் விடுவிப்பு
    X

    ஆபாச பட நடிகைக்கு பணம் வழங்கிய வழக்கு: அபராதம், நிபந்தனை ஏதுமின்றி தண்டனையில் இருந்து டிரம்ப் விடுவிப்பு

    • ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் டிரம்ப் உடனான நெருக்கம் தொடர்பாக பேட்டி அளித்தார்.
    • தொடர்பு குறித்து தொடர்ந்து செய்தி வெளியாகாமல் இருக்க பணம் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டார்.

    அமெரிக்க அதிபராக வரும் 20-ந்தேதி பதவி ஏற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் முதன் முறையாக 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அந்த சமயத்தில் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், டிரம்ப் உடனான தன் நெருக்கம் தொடர்பாக தொடர்ந்து பேட்டி அளித்தார். இதனால், தனக்கு தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதிய டிரம்ப், ஸ்டாம்மி டேனியல்ஸ் மேலும் தகவல் ஏதும் கூறாமல் இருக்க பணம் கொடுத்து ஸ்டார்மி வாயை அடைத்தார். இவ்வாறு கொடுக்கப்பட்ட பணத்திற்கு முறைகேடாக பொய் கணக்கு எழுதியதாக குற்றம்சாட்டப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு, நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை அறிவிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    தற்போது அதிபர் தேர்தல் முடிந்து டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வரும் 20-ந்தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்க இருக்கும் நிலையில் ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ஜனவரி 10-ந்தேதி (உள்ளூர் நேரப்படி) தண்டனையை அறிவிக்க உள்ளதாக நியூயார்க்கின் மேன்ஹாட்டன் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டிரம்ப்-ஐ நிபந்தனையின்றி விடுவித்து உத்தரவிட்டு உள்ளார். குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு சிறை தண்டனையோ அபராதமோ எதுவும் விதிக்காமல் விடுவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்து உள்ளது. முன்னதாக சிறை தண்டனை வழங்கப்படாது என நீதிபதி தெரிவித்திருந்தார். தற்போது அபராதமும் விதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார். அபராதம் விதிக்கப்படாத நிலையிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாகும் முதல் நபர் டொனால்டு டிரம்ப் ஆவார்.

    இந்த வழக்கில் தண்டனையை அறிவிப்பை நிறுத்தி வைக்கக்கோரி நியூயார்க் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் டொனால்டு டிரம்ப் முறையீடு செய்திருந்தார். இரண்டு நீதிமன்றங்களும் டொனால்டு டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்தது. அதன்பிறகு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    Next Story
    ×