என் மலர்
உலகம்

FBI இயக்குநரான இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல்.. பாலிவுட் மீம் வீடியோ பகிர்ந்த வெள்ளை மாளிகை

- எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது.
- பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த மாதம் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றார். அதற்கு முன் தனது புதிய அரசில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் மற்றும் கேபினட் அந்தஸ்தை கொண்ட முக்கிய அதிகாரிகளை அவர் அறிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது. இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2016-ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீட்டை வெளிக்கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்த காஷ் படேல், டிரம்பின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளரும் வெள்ளை மாளிகையின் துணைத் தலைவருமான டான் ஸ்கேவினோ, காஷ் படேலை FBI இயக்குநராக உறுதி செய்த பிறகு வாழ்த்த பாலிவுட் மீம் வீடியோ ஒன்றைப் பயன்படுத்தினார்.
அந்த மீம்ஸில் ரன்வீர் சிங் நடித்த 'பாஜிராவ் மஸ்தானி' திரைப்படத்தின் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. தனது நியமனம் குறித்து பேசியிருந்த காஸ் படேல், "வெளிப்படையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் நீதியை உறுதி செய்யும் ஒரு FBI ஐ பெற அமெரிக்க மக்கள் தகுதியானார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
Congratulations to the new Director of the FBI, @Kash_Patel! pic.twitter.com/JsANV0s9cP
— Dan Scavino (@Scavino47) February 20, 2025