என் மலர்
உலகம்

பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த அயல்தேச பாஜக குழு தலைவருக்கு ஆஸ்திரேலியாவில் 40 ஆண்டுகள் சிறை!

- 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
- வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் ஷீட்டில் அவர்களின் தோற்றத்துக்கு மதிப்பெண் கொடுத்து வந்தார்.
ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்து மதத் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (43). ஆஸ்திரேலியாவின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட பாலேஷ் தன்கர், பாஜக கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வகித்து வந்தார்.
இதற்கிடையே போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலை தேடி வந்த பெண்களை, சிட்னியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர். அவர்களை வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் சீட் ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள், அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பெண் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள அவரது வியாபார மையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
2023 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவர் 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 07) டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம், பாலேஷ் தன்கருக்கு 40 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது என்றும் அவரது 83 வது வயதில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.