என் மலர்
பிரான்ஸ்
- தளவாடங்கள் இல்லாததால் ரஷிய ராணுவம் முன்னேறுவதை உக்ரைனால் தடுக்க முடியவில்லை
- ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம் என்றார் மேக்ரான்
கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 வருடங்களைக் கடந்து தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனுக்கு உதவி வந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிதியுதவி உக்ரைனுக்கு தொடர்ந்து கிடைப்பதில் பல்வேறு காரணங்களால் சிக்கல் நிலவுகிறது.
உக்ரைனிடம் போதுமான அளவு ராணுவ தளவாடங்கள் இல்லாததால், தங்கள் நாட்டில் ரஷிய ராணுவம் முன்னேறி , பிராந்தியங்களை கைப்பற்றுவதை தடுப்பது கடினமாக உள்ளது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறார்.
மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவிகள் கிடைப்பது தாமதமாவதால், உயிரிழப்புடன் உக்ரைனின் பல பிராந்தியங்களை ரஷியாவிடம் இழக்க நேரிடும் என உக்ரைன் ராணுவ அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான நாடுகளின் சந்திப்பு, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.
இதில் பேசிய பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் தெரிவித்ததாவது:
இப்போரில் ரஷியா வெற்றி பெறக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புடன் நிலையாக இருக்க ரஷியா இப்போரில் தோற்க வேண்டியது அவசியம்.
ரஷியா வெற்றி பெறாமலிருக்க நாங்கள் அனைத்தையும் செய்வோம்.
ரஷியாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன்தான் நாங்கள் போரிடுகிறோமே தவிர ரஷிய மக்களுடன் அல்ல.
குறுகிய தூர மற்றும் தொலைதூர ஏவுகணைகளும், வெடிகுண்டுகளும் உக்ரைனுக்கு விரைவில் வழங்கப்படும்.
உக்ரைனுக்கு நட்பு நாடுகளின் ராணுவத்தை அனுப்ப வேண்டிய சூழல் வந்தால் அதையும் பரிசீலனை செய்வோம்.
இவ்வாறு மேக்ரான் கூறினார்.
சில தினங்களுக்கு முன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், "நேரடியாக மேற்கத்திய நாடுகளின் ராணுவம் உக்ரைன் மண்ணில் இருந்து போரிட தொடங்கினால் அது ரஷியாவிற்கும் நேட்டோ (NATO) கூட்டணி நாடுகளுக்கும் எதிரான போராக மாறும் "என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- பிரான்ஸ் தேசிய கொடியை மஹ்ஜோபி அவமதித்து வீடியோ பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது
- நாட்டை அவமதிப்பவர்களை எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம் என்றார் டர்மனின்
பிரான்சில் பக்னோல்ஸ்-சர்-செஸ் (Bagnols-sur-Ceze) பகுதியில் மத பணிகளில் ஈடுபட்டு வந்தவர் இமாம் மஹ்ஜோப் மஹ்ஜோபி (Mahjoub Mahjoubi). துனிசியா (Tunisia) நாட்டை சேர்ந்த மஹ்ஜோபி 38 வருடங்களுக்கு முன்பே பிரான்சில் குடியேறியவர்.
மஹ்ஜோபி ஒரு சமூக வலைப்பதிவில் பிரான்ஸ் நாட்டு தேசிய கொடியை "சாத்தான்" என பொருள்பட பேசி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் அரசின் கவனத்திற்கு இந்த பதிவு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து மஹ்ஜோபியை நாட்டை விட்டு வெளியேற அந்நாட்டு உள்துறை உத்தரவிட்டது.
மஹ்ஜோபி வெளியிட்டுள்ள கருத்துகள் பிரெஞ்சு குடியரசின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு எதிராக உள்ளதாகவும், பெண்களுக்கு எதிராகவும், தவறான சிந்தனைகளை ஊக்குவித்து யூத மக்களுக்கு பதட்டத்தை உண்டாக்கும் வகையில் உள்ளதாகவும் பிரான்ஸ் அரசு தெரிவித்தது.
ஆனால், மஹ்ஜோபி தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் தனக்கு தேசிய கொடியை அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.
"கைது செய்யப்பட்ட 12 மணி நேரத்தில் மஜ்ஜோபி பிரெஞ்சு எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டார். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நாட்டிற்கு எதிரானவர்கள் எளிதாக தப்பி செல்ல விட மாட்டோம்" என பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் (Gerald Darmanin) கூறினார்.
இந்நிலையில், துனிசியா தலைநகர் துனிஸ் (Tunis) செல்லும் விமானத்தில் அவர் ஏற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக வழக்கு தொடுக்க போவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து பிரான்சிற்கு வந்து வாழ்பவர்களை அந்நாடு வெளியேற்ற விரும்பினால், உடனடியாக செயல்படுத்தும் வகையில் அந்நாட்டு குடியுரிமை சட்டங்களில் சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பல்வேறு காரணங்களுக்காக எஸ்யூவி ரக கார்களையே மக்கள் விரும்புகின்றனர்
- நகரிலேயே வசிப்பவர்களுக்கான வாகன நிறுத்த கட்டணத்தில் மாற்றம் இல்லை
மேற்கத்திய நாடுகளில் பொது போக்குவரத்திற்கான அரசு வாகனங்கள் குறைவு. மக்களில் பெரும்பாலானோர், கார்களையே தங்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
சமீப சில வருடங்களாக, உலகளவில் எஸ்யூவி (Sports Utility Vehicles) எனப்படும் கார்களின் உற்பத்தி அதிகமாகி விட்டது.
அவற்றில் அமரும் இட வசதி, பயணிப்பவர்களுக்கான எண்ணிக்கை, பொருட்களுக்கான இடம் உள்ளிட்டவை சிறிய கார்களை விட அதிகம். மேலும், இவை நீண்ட தூர பயணத்திற்கும், கரடுமுரடான சாலைகளிலும் செலுத்துவதற்கு தகுதி வாய்ந்தவை.
எனவே, பெரும்பாலான மக்கள் எஸ்யூவி ரக கார்களையே விரும்பி வாங்குகின்றனர்.
ஆனால், இவற்றை நிறுத்த அதிக இடம் தேவைப்படும்.
இந்நிலையில், பாரிஸ் நகரில் வாகன நிறுத்துமிடங்களில் இது சிக்கலை தோற்றுவித்ததால், இவற்றிற்கான வாகன நிறுத்த கட்டணத்தை அதிகரிக்க உத்தேசித்த அரசு, இது குறித்து மக்களின் எண்ணத்தை அறிய பொதுஜன வாக்கெடுப்பு (referendum) நடத்தியது.
நேற்று நடைபெற்ற இந்த பொதுஜன வாக்கெடுப்பில், சுமார் 54.5 சதவீத மக்கள் கட்டண அதிகரிப்பிற்கு சம்மதித்துள்ளனர்.
இதன்படி, பாரிஸ் நகரத்திற்கு உள்ளே, 1.6 டன் மற்றும் கூடுதலான எடையுள்ள வாகனங்களுக்கு சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கு கட்டணம், சுமார் ரூ.1600 (18 யூரோக்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண விகிதம், முன்பிருந்ததை காட்டிலும் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இது, தினந்தோறும் பல வெளியூர்களில் இருந்து பாரிஸ் நகருக்கு பல்வேறு பணிகளுக்காக வருபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.
பாரிஸ் நகரிலேயே வசிப்பவர்களுக்கான கட்டணம் மாற்றப்படாததால், அவர்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.
பாரிஸ் நகர மேயர், ஆன் ஹிடால்கோ (Anne Hidalgo), இதுவரை தனது 10-வருட பதவிக்காலத்தில், நகரின் பல இடங்களை பாதசாரிகளுக்கு சாதகமாகவும், சைக்கிள் போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மாற்றி அமைத்து வருகிறார்.
எஸ்யூவி ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் போது உயிரிழப்புகள் அதிகமாவதாகவும், அவற்றின் பயன்பாட்டிற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்து வந்த நிலையில், இந்த கட்டண உயர்வு பலராலும் வரவேற்கப்பட்டிருக்கிறது.
- போகியா நகரின் கார்கனோ மாபியா குழுவின் தலைவன் மார்கோ ராடுவோனோ
- பல போர்வைகளை ஒன்றாக இணைத்து மதில் சுவரை தாண்டி தப்பினார் மார்கோ
இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் பல "மாபியா" கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.
இத்தாலியின் போகியா (Foggia) எனும் நகரில் செயல்பட்டு வந்த "கார்கனோ குழு" (Gargano clan) எனப்படும் இத்தகைய ஒரு கும்பலின் தலைவன், மார்கோ ராடுவோனோ (40).
30 வருட நீண்டகால தேடலுக்கு பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்ட மார்கோவிற்கு, நீதிமன்றத்தால் 24-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. மார்கோ மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தன.
இதையடுத்து இத்தாலியின் தீவு பிரதேசமான சார்டினியாவின் நுவோரோ பகுதியில் உள்ள கடுமையான காவல் கட்டுப்பாடுகள் நிறைந்த சிறையில் மார்கோ அடைக்கப்பட்டான்.
கடந்த 2023 பிப்ரவரி மாதம், மார்கோ, சார்டினியாவின் சிறை அறையில் இருந்து வெளியே வந்து, பல போர்வைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, சிறைச்சாலையின் மதில் சுவரையும் தாண்டி, கீழே குதித்து தப்பிச் சென்றான்.
ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகளின் தேடல் பட்டியலில் உள்ள முக்கிய குற்றவாளியான மார்கோ தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை மார்கோவை தேடி வந்தது.
ஐரோப்பிய நாடுகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில், மார்கோ, பிரான்ஸ் நாட்டின் அலெரியா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு பெண்ணுடன் உணவருந்தி கொண்டிருந்த போது பிரான்ஸ் காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.
போலியான பெயர் மற்றும் போலி பதிவு எண் கொண்ட வாகனத்துடன் அப்பகுதியிலேயே அவன் வசித்து வந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
மார்கோ சிறையிலிருந்து தப்பி சென்றது இத்தாலி அரசுக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது.
இந்நிலையில், அவன் மீண்டும் பிடிபட்டதால், தங்கள் நாட்டிற்கு அவனை அழைத்து செல்லும் முயற்சியில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.
- இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது.
- பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்கத்தொடங்கின.
பாரிஸ்:
யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. ஜிபே, போன் பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி நாம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம் மற்றும் பணத்தைப் பெறலாம்.
இந்தியாவின் யுபிஐ சேவை உலகிற்கே முன்மாதிரியாக இருந்துவருகிறது. பல்வேறு நாடுகளும் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளை ஏற்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில், யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்சும் இன்று இணைந்துள்ளது. பாரிசில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன. இதன்படி, இனி பிரான்ஸ் நாட்டில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.
- மோனா லிசாவின் "மர்ம புன்னகை" தினந்தோறும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது
- உணவு முக்கியமா அல்லது ஓவியம் முக்கியமா என அந்த அமைப்பினர் கேட்டனர்
15-வது நூற்றாண்டில், இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரைந்த உலக புகழ் பெற்ற ஓவியம், மோனா லிசா (Mona Lisa).
மோனா லிசா ஓவியம், தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின், சியன் (Seine) நதிக்கரையில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
மோனா லிசா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் "மர்ம புன்னகை" தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.
அந்த ஓவியம் விஷமிகளால் நாசப்படுத்தப்படுவதை தடுக்க, பிரான்ஸ் அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு தடுப்பும், அதை தாண்டி குண்டு துளைக்க முடியாத ஒரு கண்ணாடியும் வைத்து மறைத்துள்ளது.
நேற்று காலை சுமார் 10:00 மணியளவில் இரு பெண்கள் பார்வையாளர்களுடன் கலந்து அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்தனர்.
திடீரென அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கோப்பையில் இருந்த ஆரஞ்சு நிற சூப்பை மோனா லிசா ஓவியத்தின் மீது வீசினர்.
தொடர்ந்து ஓவியத்திற்கு முன் இருந்த தடுப்பை தாண்டி சென்று ஓவியத்தை ரசித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி உரையாற்ற தொடங்கினர்.
ரிபோஸ்டெ அலிமென்டெய்ர் (Riposte Alimentaire) எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அவர்கள், தங்கள் உரையில்,"எது முக்கியம்? ஒரு ஓவியமா? அல்லது ஆரோக்கியமான உணவு மனிதகுலத்திற்கு தொடர்ந்து உணவு கிடைப்பதா? தவறான விவசாய கொள்கைகளால் விவசாயிகள் பரிதாப நிலையில் இழக்கின்றனர்" என கூறினர்.
எதிர்பாராத இந்த செயலை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியினர் அந்த இருவரையும் தப்ப விடாமல் பிடித்தனர்.
ALERTE - Des militantes pour le climat jettent de la soupe sur le tableau de La Joconde au musée du Louvre. @CLPRESSFR pic.twitter.com/Aa7gavRRc4
— CLPRESS / Agence de presse (@CLPRESSFR) January 28, 2024
அங்கிருந்த பிற சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இச்சம்பவத்தால் மோனா லிசா ஓவியத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்தது.
சம்பவம் நடந்த பகுதி உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் மீண்டும் சிறிது நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்த இருவரையும் கைது செய்த பிரான்ஸ் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.
இது குறித்து பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர், ரசிடா டாடி தனது எக்ஸ் கணக்கில், "மோனா லிசா நமது பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்று. எக்காரணம் கொண்டும் அதற்கு தீங்கு விளைவிப்பது ஏற்கப்பட கூடியது அல்ல" என பதிவிட்டுள்ளார்.
- அரசு நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது
- சுமார் 450 சிறு ரக கப்பல்களும் இப்பகுதியில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது.
சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டால்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது.
மீனிபிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டால்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டால்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர்.
அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, 2024 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 20 வரை அனைத்து விதமான வர்த்தக ரீதியான மீன்பிடி பணிகளை பிரான்ஸ் தடை செய்துள்ளது.
உள்ளூர் மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தடை தொடரும் என அரசு அறிவித்தது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்திற்கு பிறகு முதல் முறையாக பிரான்ஸ் மீன்பிடி தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பிஸ்கே விரிகுடா (Bay of Biscay) எனப்படும் பிரான்சின் வடமேற்கு கரையோர பிரிட்டனியில் உள்ள ஃபினிஸ்டியர் பகுதியிலிருந்து அண்டை நாடான ஸ்பெயினின் கடல் எல்லை வரை மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
சுமார் 450 சிறு ரக கப்பல்களும் இப்பகுதியில் பயணம் செய்ய முடியாது.
பல மில்லியன் யூரோக்கள் இதனால் கடல் வணிகத்தில் இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இழப்பை ஈடு செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளது.
- பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமராக அந்நாட்டு கல்வி மந்திரி கேப்ரியல் அட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பை பெறுகிறார்.
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் அதிபராக இம்மானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக பதவியேற்றார். பிரான்ஸ் அரசு கொண்டு வந்த ஓய்வூதிய கொள்கைகள், குடியேற்ற சட்டங்கள் ஆகியவற்றை எதிர்த்து இம்மானுவல் மேக்ரானுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்த மேக்ரான் அரசு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.
பிரான்ஸ் நாட்டின் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர அதிபர் இம்மானுவல் மேக்ரான் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே, அந்நாட்டின் பிரதமராக இருந்த 62 வயதான எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அடுத்த பிரதமராக 34 வயதான அந்நாட்டின் கல்வி மந்திரி கேப்ரியல் அட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்ரியல் அட்டல் தன்னை ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என வெளிப்படையாக அறிவித்தவர் ஆவர்.
பிரான்ஸ் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்ற சிறப்பையும், பிரதமராக பதவியேற்கும் முதல் தன்பாலின ஈர்ப்பாளர் என்ற சிறப்பையும் காப்ரியல் அட்டல் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணி
- 268 பில்லியன் டாலர் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை நிர்வகித்து வருகிறார் மேயர்ஸ்
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் வணிக, பொருளாதார, பங்கு சந்தை ஊடகம், ப்ளூம்பர்க் (Bloomberg). இந்நிறுவனம், உலகின் முன்னணி கோடீசுவரர்களை, அவர்களின் நிகர சொத்து மதிப்பை வைத்து உருவாக்கும் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.
இப்பட்டியலின்படி, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஃபேஷன் ஆடை மற்றும் ஒப்பனை துறையில் முன்னணியில் உள்ள லோரியல் (L'Oreal) நிறுவனத்தின் தலைவரான, 70 வயதாகும் ஃப்ரான்காய் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (Francoise Bettencourt Meyers), 100 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு பெற்ற முதல் பெண்மணியாக இடம் பிடித்துள்ளார்.
மேயர்ஸ், உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ள 268 பில்லியன் டாலர் நிறுவனமான லோரியல் தலைமை பொறுப்பை அவரது இரு மகன்களுடன் நிர்வகித்து வருகிறார்.
கிறித்துவ மக்களின் புனித நூலான பைபிள் குறித்து 5 பாகங்கள் மற்றும் கிரேக்க கடவுள் குறித்தும் புத்தகங்கள் எழுதியுள்ள மேயர்ஸ், பல மணி நேரங்கள் இடைவிடாது பியானோ வாசிக்கும் திறன் படைத்தவர்.
2017ல் தன் தாயிடமிருந்து லோரியல் நிர்வாக பொறுப்பை ஏற்ற மேயர்ஸ், இன்று வரை திறம்பட நிர்வகித்து வருகிறார்.
கொரோனா காலகட்டத்தில் ஒப்பனை பொருட்களுக்கான தேவை குறைந்திருந்தாலும், சில மாதங்களிலேயே விற்பனையை பல மடங்கு உயர்த்தி காட்டினார், மேயர்ஸ்.
தற்போது உலகின் முன்னணி கோடீசுவரர்களில் 12வது இடத்தை பிடித்துள்ளார் மேயர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சேனல், யூனிலீவர், ரெவ்லான் என இத்துறையில் பல போட்டி நிறுவனங்கள் இருந்தாலும், ஒப்பனை, சரும பாதுகாப்பு, சிகை பாதுகாப்பு, சிகை நிறம் கூட்டுதல் மற்றும் ஆண்கள் ஒப்பனை என பல கிளைகளில் விற்பனையை விஸ்தரித்து நம்பர் 1 இடத்தில் லோரியல் நிறுவனத்தை மேயர்ஸ் தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1909ல் மேயர்ஸின் தாத்தா யூகின் ஷுயல்லர் (Eugene Schueller) என்பவர், தான் கண்டுபிடித்த தலை சாயத்தை விற்பனை செய்வதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம், லோரியல் இன்று உலகெங்கும் கொடி கட்டி பறக்கிறது.
- ஏர்பஸ் அளித்த விருந்தில் 2600 ஊழியர்கள் பங்கேற்றனர்
- பல்வேறு அசைவ உணவுகளும், ஐஸ்கிரீம் வகைகளும் பரிமாறப்பட்டன
ஐரோப்பாவை மையமாக கொண்டு செயல்படும் முன்னணி விமான தயாரிப்பு பன்னாட்டு நிறுவனம், ஏர்பஸ் (Airbus). பயணிகள் போக்குவரத்து, ராணுவம் மற்றும் விண்வெளி பயன்பாட்டிற்கு விமானங்களை தயாரிக்கும் ஏர்பஸ், உலகிலேயே முன்னணி ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்திற்கு பிரான்ஸ் நாட்டிலும் கிளை உண்டு.
பிரான்ஸில் உள்ள தனது நிறுவன ஊழியர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தளிக்க முடிவு செய்தது ஏர்பஸ் அட்லான்டிக். இந்த விருந்தில் சுமார் 2,600 ஊழியர்கள் பங்கேற்றனர்.
இந்த விருந்து, மேற்கு பிரான்ஸ் பகுதியில் உள்ள லொய்ர்-அட்லான்டிக் (Loire-Atlantique) பிராந்தியத்தில் மாண்டார்-டி-ப்ரெடான் (Montoir-de-Bretagne) பகுதியில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் சொந்த உணவகத்தில் வழங்கப்பட்டது.
விருந்தில் பல்வேறு உயர்தர அசைவ உணவுகள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் பரிமாறப்பட்டன.
ஆனால், உயர்தரமான உணவு வகைகள் வழங்கப்பட்ட இதில் பங்கேற்ற 24 மணி நேரத்தில் சுமார் 700 பணியாளர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அத்துடன் அவர்களுக்கு தலைவலி, வாந்தி, வயிற்று போக்கு உள்ளிட்ட உபாதைகளும் சேர்ந்து கொண்டன.
பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு குடல் அழற்சி நோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்நாட்டு சுகாதார துறைக்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டு, அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ஏர்பஸ் செய்தி தொடர்பாளர், "நாங்கள் விருந்தளித்த ஒவ்வொரு உணவு வகையின் மாதிரியையும் வைத்துள்ளோம். விசாரணைக்கு சுகாதார துறையுடன் ஒத்துழைக்கிறோம். விசாரணை நிறைவடைய சில நாட்கள் ஆகலாம் என நினைக்கிறோம்" என தெரிவித்தார்.
- துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாட்டிற்கு சென்ற விமானம் பிரான்ஸில் தரையிறக்கம்.
- இந்தியர்களில சிலர் புகார் தெரிவித்ததால் மனித கடத்தல் சம்பவமாக இருக்கும் என அதிகாரிகள் சந்தேகம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் விமான நிலையத்தில் இருந்து 303 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மத்திய அமெரிக்க நாடானா நிகாரகுவா நாட்டிற்கு ருமேனியாவின் பிரபலமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது.
பிரான்ஸ் எல்லைப்பகுதியில பறந்தபோது, விமானத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் கிழக்கு பிரான்ஸில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
அப்போது விமானத்தில் இருந்த சிலர் தாங்கள் மனித கடத்தல் கும்பலால் அவதிக்குள்ளாகியுள்ளோம் என அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் பிரான்ஸ் அதிகாரிகள் உடனடியாக விமானத்தை மீண்டும் பறக்க விடாமல் தடுத்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தினர். 303 பேர் ஒரே விமானத்தில் சென்றதால், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்திய தூதரகத்தின் விரிவான விசாரணைக்குப் பின் அவர்கள் மனித கடத்தல் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களா? என்பது தெரியவரும்.
இவர்கள் அனைவரும் மத்திய அமெரிக்காவுக்கு பயணம் செய்து அதன்பின் சட்டவிரோதமாக அமெரிக்கா அல்லது கனடாவுக்கு செல்ல முயற்சி மேற்கொள்ள நினைத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விமான நிலையத்தில் விமான தரையிறங்கியதும் இந்தியர்கள் அனைவரும் இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ள நிலையில், மீண்டும் செல்வதுற்கு அனுமதி கிடைக்காமல் அங்கேயே இருந்து வருகிறார்கள்.
வெளிநாட்டினர் பிரான்ஸ் நாட்டிற்குள் வந்தபிறகு, அந்நாட்டின் எல்லை போலீசாரால் நான்கு நாட்களுக்கு அவர்கள் செல்ல வேண்டிய நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள விடாமல் தடுத்து நிறுத்தி வைக்க முடியும்.
- எதிர் கட்சியின் ஒத்துழைப்புடன் ஆளும் கட்சி இந்த மசோதாவை வெற்றி பெற செய்தது
- நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது எங்கள் கடமை என்றார் மேக்ரான்
பல ஆண்டுகளாக அல்ஜீரியா, மொராக்கோ, போர்ச்சுகல், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்டவிரோத அகதிகளாக தரைவழியாகவும், கடல் வழியாகவும் நீண்ட தூர ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு மக்கள் உள்ளே நுழைவது தொடர்கதையாகி வருகிறது.
சமீப சில வருடங்களாக பிரான்ஸில் இவ்வாறு உள்ளே நுழையும் அகதிகளால் பல்வேறு உள்நாட்டு சிக்கல்கள் எழுந்தன. கட்டுக்கடங்காமல் அகதிகள் நுழைவதை தடுக்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் என அந்நாட்டு அரசியல் தலைவர்கள் விவாதித்து வந்தனர்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டிற்கு வரும் அகதிகள் குறித்த புலம் பெயர்வோர் சட்டத்தில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரும் வகையில் மசோதாவை வெற்றிகரமாக தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவை பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரானின் ரெனய்ஸான்ஸ் கட்சி (Renaissance party) மற்றும் எதிர்கட்சி தலைவரும் தீவிர வலதுசாரி சிந்தனையாளருமான மரின் லெ பென் (Marine Le Pen) சார்ந்த நேஷனல் ரேலி (National Rally) ஆகிய இரு கட்சிகளுமே ஒருமித்து கொண்டு வந்திருக்கின்றன.
மேக்ரானின் கட்சிக்குள்ளேயே இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் இதனை பொருட்படுத்தவில்லை.
விரைவில் சட்ட அந்தஸ்து பெற உள்ள இந்த மசோதாவின்படி புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை கொண்டு வருவது கடினமாக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதும் தாமதமாகும்.
குடிமகன்கள் வேறு, அகதிகள் வேறு என பாகுபாடு காட்டும் இதன்படி சட்டபூர்வமாக குடியேறுவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை கடினமாகி உள்ளது.
மரின் லெ பென் வரவிருக்கும் புதிய சட்டத்தை, தங்கள் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய மேக்ரான், "நாட்டில் புலம் பெயர்பவர்களால் பிரச்சனை இருப்பது உண்மைதான். இதனால் உள்நாட்டில் அமைதியின்மை தோன்ற கூடிய நிலை இருந்தது. அதனை தடுக்க வேண்டியது அரசின் கடமை. வெள்ளம் போல் உள்ளே நுழையும் அகதிகளை தடுக்கும் கவசமாக இந்த சட்டம் அமையும்" என தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் அகதிகளுக்கு உறுப்பினர் நாடுகளின் எல்லைக்கருகே மையம் அமைக்கவும், நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படும் அகதிகளை உடனுக்குடன் அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை சில தினங்களுக்கு முன் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
2027ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் அகதிகள் பிரச்சனை வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் அம்சமாக இருக்கும் என மேக்ரான் கருதுவதால் தன் நாட்டு மக்களை ஈர்க்கும் வகையில் விரைவாக இந்த சட்டத்தை கொண்டு வர முயல்கிறார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.