என் மலர்
உலகம்
ஆபாச பத்திரிகையின் அட்டை படத்தில் பிரான்ஸ் பெண் மந்திரி
- பெண்ணியவாதியும், எழுத்தாளருமான இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
- அவரின் சம்மதத்தோடு அவரின் புகைப்படத்தை அட்டை படத்தில் போட்டுள்ளது பிளேபாய் பத்திரிகை.
பாரீஸ் :
பிரான்சில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசில் சமூகப் பொருளாதாரம் மற்றும் சங்கங்களுக்கான மந்திரியாக இருந்து வருபவர் மர்லின் சியாப்பா. பெண்ணியவாதியும், எழுத்தாளருமான இவர் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் ஆவார்.
அந்த வகையில் தற்போது அவர் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் பிரபல ஆபாச பத்திரிகையான பிளேபாய் பத்திரிகைக்கு பேட்டி அளித்ததோடு மட்டுமல்லாமல் அதன் அட்டை படத்துக்கும் 'போஸ்' கொடுத்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வயது வந்தோருக்கான பத்திரிகைக்கு பெண்கள் மற்றும் ஓரின சேர்க்கை உரிமைகள் மற்றும் கருக்கலைப்பு குறித்து 12 பக்கங்களுக்கு பேட்டி அளித்துள்ளார் மர்லின் சியாப்பா. மேலும் அவரின் சம்மதத்தோடு அவரின் புகைப்படத்தை அட்டை படத்தில் போட்டுள்ளது பிளேபாய் பத்திரிகை.
பொதுவாக அட்டை படத்தில் அறை, குறை ஆடையுடனோ அல்லது ஆடை இன்றியோ பெண்களின் படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் மர்லின் சியாப்பா முழு ஆடையுடன் அட்டை படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். இருப்பினும் அவரின் இந்த செயல் சக எம்.பி.க்களையும், கட்சியினரையும் எரிச்சலடைய செய்துள்ளது.
குறிப்பாக பிரான்சின் 2-வது பெண் பிரதமரான எலிசபெத் போர்ன், மர்லின் சியாப்பாவை நேரில் அழைத்து கண்டித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தனது செயலை நியாயப்படுத்தியுள்ள மர்லின் சியாப்பா, டுவிட்டரில், "பிரான்சில், பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அது பிற்போக்குவாதிகள் மற்றும் நயவஞ்சகர்களை எரிச்சலூட்டுகிறதா, இல்லையா என்பது எனக்கு தெரியாது. எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் பெண்கள் தாங்கள் விரும்புவதைச் செய்யும் உரிமையைப் பாதுகாப்பது அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.