search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம்: தினந்தோறும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்?
    X

    மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம்: தினந்தோறும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்?

    • வடக்கு காசாவில் மருத்துவமனை, ஐ.நா. முகாம்கள்தான் பாதுகாப்பு என பாலஸ்தீனர்கள் அங்கு சென்று தங்கியுள்ளனர்
    • மக்கள் வெளியேறுவதற்கான தினந்தோறும் 4 மணி நேரம் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் என அமெரிக்கா தகவல்.

    காசாவை இரண்டாக பிரித்து, வடக்கு காசாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதல் காரணமாக அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய அளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எப்படியாவது உலக நாடுகள் போர் நிறுத்தத்தை கொண்டு வந்துவிடும் என்ற நம்பிக்கையில், லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காசாவிலேயே தங்கியுள்ளனர். ஆனால், தெற்கு காசாவிற்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    தற்போதைய நிலையில் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என உணர்ந்த பெரும்பாலான பாலஸ்தீன மக்கள், தெற்கு காசாவிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நடைபயணமாக தெற்கு காசாவை சென்றடைந்து வருகிறார்கள்.

    வடக்கு காசாவில் உள்ளவர்கள் இனிமேல் வீடுகளில் தங்கியிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கருதி மருத்துவமனைகள், ஐ.நா. அமைத்துள்ள முகாம்களுக்கு இடம்பெற முடிவு செய்துள்ளனர். அதன்படி காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    ஆனால் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளதால் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக, அங்கிருந்து தெற்கு காசாவிற்கு சென்றுள்ள மூன்று பேர் தெரிவித்துள்ளனர்.

    இந்த மருத்துவமனை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும், மருத்துவமனை அறைகள், அறுவை சிகிச்சை செய்யும் ஆபரேசன் தியேட்டர்களில் கூட மக்கள் தூங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலர் மருத்துவமனை அமைந்துள்ள தெருவில் தூங்குகிறார்கள்.

    இவர்களுக்கு தினந்தோறும் குறைந்த அளவிலான உணவே கொடுக்கப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த மூன்று பேரும் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இஸ்ரேல் தினமும் நான்கு மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் அதை ஏற்றுக்கொண்டதாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால் பாலஸ்தீன மக்கள் அஞ்சியபடியே வாழ்ந்து வரும் அவலை நிலை நீடித்து வருகிறது.

    காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்யவும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் மூன்று நாட்கள் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×