என் மலர்
உலகம்
'குற்றவாளி கிடையாது'.. அமெரிக்க மருத்துவக் காப்பீடு நிறுவன சி.இ.ஓ. கொலை வழக்கில் திருப்பம்
- கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
- மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார்.
அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் [50 வயது] கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் கடையில் வைத்து 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை எப்.பி.ஐ. போலீஸ் கைது செய்தது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து அதன்மூலம் இந்த கொலையை அவர் செய்ததாக போலீஸ் தெரிவித்தது.
லைஃப் இன்சூரன்ஸ் சார்ந்த யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதாக வெகு மக்களிடையே கோபம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மாஞ்சியோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொலை, பயங்கரவாத செய்லபாடுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மாஞ்சியோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள நியூ யார்க் மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று [திங்கள்கிழமை] மாஞ்சியோன் ஆஜர்படுத்தப்பட்டார்.
மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார். தனது கட்சிக்காரரை மனித பிங்பாங் பந்துபோல் அதிகாரிகள் நடத்துவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் குற்றம் செய்யவில்லை [NOT GUILTY] என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை 2025, பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் இந்த வழக்கில் மாஞ்சியோன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்து, இதற்கு வன்முறைதான் பதில் என்றும் நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று கைது செய்யப்பட்டபோது மான்ஜியோனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அறிக்கையில் எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.