search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    புரியவில்லை.. இந்தியாவுக்கு எதிரான செயல்கள் குறித்த நிருபரின் கேள்வியை தட்டிக் கழித்த டிரம்ப்
    X

    "புரியவில்லை.." இந்தியாவுக்கு எதிரான செயல்கள் குறித்த நிருபரின் கேள்வியை தட்டிக் கழித்த டிரம்ப்

    • இந்தியா தான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிவித்தார்.
    • நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல.

    இந்தியாவில் இருந்து ஏஐ மாநாட்டிக்கு பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று நேற்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார்.

    வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

    இதற்கிடையே இந்தியாதான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு என்று கூறி அதற்கு ஈடாக இந்திய பொருட்களுக்கு பரஸ்பர வரி விதிப்பு முறையை டிரம்ப் அறிமுகப்படுத்தி உள்ளார். இது இந்தியா மீது வரிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    மேலும் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு கீழ்த்தரமாக நடத்தப்பட்டது குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால் டிரம்ப் சந்திப்பின்போது, சட்டவிரோத இந்திய குடியேறிகளை திரும்பப்பெறுவதாக மோடி கூறியுள்ளார்.

    இதற்கிடையே மோடியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது டிரம்ப் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இந்தியாவுக்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.

    அதற்குப் பதிலளித்த டிரம்ப், "நீங்கள் சத்தமாகப் பேச வேண்டும். அவர் சொல்வதில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. அது அவரின் உச்சரிப்பு(ascent). எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கு" என்று கூறி அவரின் கேள்வியைத் தட்டிக் கழித்தார்.

    மற்றொரு இந்திய நிருபர், அமெரிக்காவில் செய்லபடும் குருபத்வந்த் சிங் பண்ணுனை மேற்கோள் காட்டி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனையில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுமா என்று கேட்டார்.

    மேலும் இந்தியத் தொழிலதிபர்கள்(அதானி) மீது முந்தைய பைடன் அரசின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறித்த கருத்தையும் கேட்டார்.

    இதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் டிரம்ப், பைடன் நிர்வாகத்துடன் இந்தியாவுக்கு நல்ல உறவு இல்லை என்று சுற்றிவளைத்துக் கூறினார்.

    அதானி மீது வழக்குபதிவு செய்யப்பட்டவெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் (FCPA) சட்டத்தை டிரம்ப் நேற்று முன் தினம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    நிருபரின் கேள்வியை டிரம்ப் 'புரியவில்லை' என தட்டிக்கழிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பில் ஆப்கனிஸ்தான் பெண் நிருபர் ஒருவர், அமெரிக்கா மீண்டும் ஆப்கனிஸ்தான் தாலிபான் அரசில் தலையிட்டு, அங்கு பெண்கள் மீது நிகழும் தீவிர அடக்குமுறையைத் தடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

    முன் வரிசையில் நின்று அவர் தெளிவாக கேள்வி எழுப்பியபோதும் அவர் கூறுவது தனக்கு புரியவில்லை என அதை டிரம்ப் தட்டிக் கழித்தார். இது குறித்து பல நிருபர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

    Next Story
    ×