search icon
என் மலர்tooltip icon

    கென்யா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார் ஓட்டுனராக இருந்து மத போதகராக மாறியவர் 2003-ல் குட் நியூஸ் இன்டர்நேஷனல் அமைப்பை தொடங்கியுள்ளார்.
    • கடந்த ஏப்ரல் மாதம் மனைவியுடன் மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரு வழிபாட்டு இயக்கத்தை நடத்திய மதபோதகர் ஒருவர் தன்னை பின்பற்றுபவர்கள் கடவுளை காண, குடிநீரோ, உணவோ எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும் என மூளை சலவை செய்துள்ளார். இதனை மூடத்தனமாக நம்பி ஒரு காட்டில் அவருடன் விரதம் இருந்தவர்களில் 400 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர்.

    கார் ஓட்டுனராக இருந்து மத போதகராக மாறியவர் பால் என்தென்கே மெக்கன்ஸி. குட் நியூஸ் இன்டர்நேஷனல் எனும் வழிபாட்டு அமைப்பை 2003-ல் தொடங்கிய அவரை பலர் பின்பற்றி வந்தனர்.

    தன்னை பின்பற்றும் நூற்றுக்கணக்கானவர்களை கடவுளை காண ஷகஹோலா காட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உபதேசம் செய்தார். இதனை நம்பியவர்களை குழந்தைகளுடன் அங்கேயே தங்கி தடையின்றி விரதம் இருக்க வைத்திருக்கிறார். இந்த அப்பாவிகள் திடீரென முடிவை மாற்றிக் கொண்டு தப்பியோட முயற்சிக்கும்போது குண்டர்கள் மூலம் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.

    இதுகுறித்து தகவல் கிடைத்து காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 13 அன்றே அங்கு சென்றிருக்கின்றனர். அங்கே சிலர் இறந்தும், சிலர் மிகவும் மெலிந்து குற்றுயிராகவும் கண்டெடுக்கப்பட்டனர்.

    அதில் இருந்து இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று 12-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருக்கிறது.

    பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கடும்பசியால் பலர் இறந்திருந்தாலும் குழந்தைகள் உட்பட பலர் கழுத்து நெரிக்கப்பட்டும், அடிக்கப்பட்டும், மூச்சுவிட முடியாமலும் இறந்திருக்கின்றனர் என தெரிய வந்திருக்கிறது.

    இந்த கூட்டு புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதும், கடந்த ஏப்ரல் மத்தியில் மெக்கன்ஸி, அவர் மனைவி மற்றும் 16 பேருடன் கைது செய்யப்பட்டார். இனப்படுகொலைக்கான தண்டனையை எதிர்நோக்கும் மெக்கன்ஸிக்கு ஜூலை 3 அன்று மோம்பாஸா நகர நீதிமன்றம் காவலை நீடித்தது.

    5 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கும் கென்யாவில் 4 ஆயிரத்திற்கும் மேம்பட்ட மத வழிபாட்டு அமைப்புகள் உள்ளதாகவும் அவற்றில் பெரும்பான்மையானவை தவறான போதனைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த மாதம் மெக்கன்ஸியை பின்பற்றுபவர்களில் 65 பேர் உணவு உண்ண மறுத்து தற்கொலைக்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். கென்யாவின் தேசிய மனித உரிமை ஆணையம் இதனை கண்டித்து அவர்களுக்கு தண்டனை வழங்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

    • கென்யாவில் தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து பல வாகனங்களில் மோதி விபத்தில் சிக்கியது.
    • இந்த கோர விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

    நைரோபி:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மேற்கு பகுதியில் டிரக் ஒன்று விபத்தில் சிக்கியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய டிரக் அடுத்தடுத்து வாகனங்களில் மோதிக்கொண்டு சாலையோரம் நின்றவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 32 பேர் காயம் அடைந்தனர்.

    நைரோபியில் இருந்து 200 கி.மீட்டர் தொலைவில் உள்ள லண்டியானி நகரத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் ஒன்றாகும்.

    விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • கென்யாவில் தறிகெட்டு ஓடிய லாரி பல வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 48 பேர் பலியாகினர்.
    • விபத்து குறித்து அறிந்த கென்ய நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

    நைரோபி:

    கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவின் நெடுஞ்சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையிலும், அதில் பயணிக்கும் அந்நாட்டு வாகனங்கள் கடும் வேகத்தில் செல்வது வழக்கம்.

    கென்யா நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு பல ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    இந்நிலையில், மேற்கு கென்யாவில் லண்டியானி சந்திப்பு என அழைக்கப்படும் பரபரப்பான பகுதியில் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

    கெரிச்சோவை நோக்கிப் பயணித்த அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது. பல்வேறு வாகனங்கள் சேதமடைந்தன.

    இந்த கோர விபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    விபத்து குறித்து அறிந்த கென்ய நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

    • உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் போலீசார் கூறுகின்றனர்.
    • 213 பேரை காணவில்லை என கென்யா செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    நைரோபி :

    கென்யா நாட்டின் வடகிழக்கு பகுதியில் இந்திய பெருங்கடலையொட்டி அமைந்துள்ள சிறிய கடற்கரை நகரம் மாலிண்டி. இங்கு 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயம்' என்கிற தேவாலயம் உள்ளது.

    இதன் தலைமை பாதிரியாராக இருப்பவர் பால் மெக்கன்சி. இவருக்கு சொந்தமான பண்ணையில் சிலர் உடல் மெலிந்த நிலையில் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த வாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அந்த பண்ணையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 பேர் பிணமாக கிடந்தனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    அதாவது, பாதிரியார் பால் மெக்கன்சி தன்னைப் பின்பற்றும் மக்களிடம் உண்ணாவிரதம் இருந்தால் ஏசுவை காணலாம் என போதித்ததாகவும், அதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து பாதிரியார் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த பலரது உடலை அவர் தனது பண்ணையில் மொத்தமாக புதைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

    அதனையடுத்து, போலீசார் அந்த பண்ணையில் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில் அங்கு தோண்டதோண்ட பிணங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் பண்ணையில் இருந்து இதுவரை 90 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குவர் போலீசார் கூறுகின்றனர்.

    இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை மந்திரி கிதுரே கிண்டிகி, "800 ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. பண்ணையின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    இதனிடையே உண்ணாவிரதம் மேற்கொண்ட சிலர், போலீசாரின் தேடுல் வேட்டைக்கு பயந்து அருகில் உள்ள காட்டுப்பகுதியில் புதருக்குள் மறைந்துள்ளதாகவும், அவர்களை போலீசார் மீட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மீட்கப்பட்டவர்களின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் சூழலில், அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிட மறுப்பதாகவும், முதலுதவி சிகிச்சை பெற்றுக் கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது.

    மாலிண்டி நகரில் 213 பேரை காணவில்லை என கென்யா செங்சிலுவை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஏசுநாதரை சந்திக்க பட்டினி கிடக்கும்படி தன்னை பின்பற்றுபவர்களை அறிவுறுத்தியுள்ளார்.
    • 15 பேர் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வந்தது தெரிந்தது.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஷகா ஹோலா கிராமத்தில் உள்ளூர் போதகர் ஒருவர் தண்ணீர், உணவு இன்றி விரதம் இருந்ததால் ஏசு நாதரை சந்திக்கலாம் என்று கூறினார்.

    குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச் என்ற அமைப்பை நடத்தி வரும் அந்த போதகரின் பேச்சை கேட்டு பலர் அங்குள்ள காட்டுக்குள் முகாமிட்டு உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர்.

    அவர்கள் பல நாட்கள் உணவு, தண்ணீர் என எதுவும் சாப்பிடாமல் இருந்து வந்துள்ளனர். இதனால் உடல் பலவீனமடைந்து மயங்கினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் காட்டு பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்கு 15 பேர் உண்ணாவிரதத்தை கடைபிடித்து வந்தது தெரிந்தது. இதில் 4 பேர் உயிரிழந்து பிணமாக கிடந்தனர். 11 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, போதகர் பால் மக்கென்சி, இங்குள்ள மக்களிடம் சாபத்தை போக்க உண்ணாவிரதம் இருக்க சொல்லி இருக்கிறார். ஏசுநாதரை சந்திக்க பட்டினி கிடக்கும்படி தன்னை பின்பற்றுபவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    காட்டில் மேலும் பலரின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றனர். தலைமறைவான போதகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது.
    • கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 205 யானைகள் இறந்து விட்டன.

    கென்யா:

    கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன.

    கடந்த 10 மாதங்களில் மட்டும் இதுவரை 205 யானைகள் இறந்து விட்டன. பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை யானைகள் தவிர வரிக் குதிரைகள், ஒட்டகசிவிங்கிகள், காட்டெருமைகள், உள்ளிட்ட 14 வகையான வன விலங்குகள் வறட்சியின் கோரபிடியில் சிக்கி பலியாகி விட்டன.

    வன விலங்குகள் தொடர்ந்து இறந்து வருவது சமூக ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. கென்யாவை பொறுத்தவரை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. வறட்சி காரணமாக சுற்றுலா தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

    அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இது அந்நாட்டு அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. கென்யாவில் தற்போதைய சூழ்நிலையில் மழைப்பொழிவுக்கான சூழ்நிலையும் இல்லை. இதனால் மேலும் பல வன உயிர் இனங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. வன விலங்குகள் இறப்பதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் பத்திரிகையாளர் அர்ஷாத் ஷெரீப் (வயது 49). இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை தீவிரமாக ஆதரித்தும், ராணுவத்தை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

    இவர் இங்கிலாந்து மற்றும் துபாய்க்கு சென்றுவிட்டு கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அவர் கென்யாவில் தலைநகர் நைரோபி அருகில் உள்ள கஜியாடோ என்ற இடத்தில் ஒரு சாலைத்தடுப்பில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இந்த சம்பவத்துக்காக வருத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் அங்கு ஒரு அறிக்கை வெளியானது.

    ஆனால் இந்த சம்பவம் பாகிஸ்தானில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. கராச்சியில் பத்திரிகையாளர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே சம்பவ இடத்தில் திருட்டுப்போன ஒரு காரைப் பிடிப்பதற்காக போலீசார் சாலைத்தடுப்பு ஏற்படுத்தி இருந்ததாகவும், அர்ஷாத் ஷெரீப் வாகனம் தடுப்பை மீறி சென்றபோது சுட்டுவிட்டதாகவும் போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கை கூறுகிறது.

    அர்ஷாத் ஷெரீப் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது தன்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

    அர்ஷாத் ஷெரீப்பின் மனைவி ஜாவேரியா சித்திக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், " நான் ஒரு அன்பான நண்பரை, கணவரை, எனக்கு பிடித்த பத்திரிகையாளரை இழந்து விட்டேன்" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    • இந்தியர்கள் காணாமல் போனது குறித்த விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை .
    • கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் முயற்சி.

    நைரோபி:

    கென்யா நாட்டில் வசிக்கும் இந்தியர்களான முகமது சமி கித்வாய் மற்றும் சுல்பிகார் அகமது கான் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் மொம்பாசா பகுதியில் கார் ஒன்றில் சென்ற நிலையில் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த கார் டிரைவர் நிகோடெமஸ் முவானியாவையும் காணவில்லை என கூறப்படுகிறது.

    இந்தியர்கள் இருவரும் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, காணாமல் போன இரண்டு இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் கென்ய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

    தலைநகர் நைரோபியில் உள்ள இந்திய தூதர் நம்க்யா கம்பா, கென்ய அதிபர் வில்லியம் சமோய் ருடோவை சந்தித்து காணாமல் போன இந்தியர்கள் குறித்த ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

    கடத்தலை அடுத்து நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அதைத் தொடர்ந்து தகவல் எதுவும் இல்லாமை மிகவும் கவலையளிக்கிறது என்றும், இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய தூதரகம் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்தது.
    • இந்த தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வானார்.

    நைரோபி:

    ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரெய்லா ஒடிங்காவை விட மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்றார்.

    கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு கென்யாட்டாவின் துணை அதிபராக வில்லியம் ரூட்டோ இருந்தார்.

    இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அதிகாரப்பூர்வ முடிவுகளுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த கென்யா சுப்ரீம் கோர்ட்டு அந்த மனுக்களை கடந்த வாரம் நிராகரித்தது.

    இந்நிலையில், வில்லியம் ரூட்டோ இன்று கென்யாவின் 5-வது அதிபரக பதவியேற்றார். இன்று நடந்த பதவியேற்பு விழாவில் உஹுரு கென்யாட்டாவும் வில்லியம் ரூட்டோவும் கைகுலுக்கி பேசிக் கொண்டது மக்களிடம் மகிழ்ச்சியை எற்படுத்தியது.

    • தனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் இருப்பதாக கலுஹானா கூறுகிறார்.
    • ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருவதாக மனைவிகள் தெரிவிக்கின்றனர்.

    நைரோபி:

    கென்யாவை சேர்ந்த ஒரு நபர் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலுஹானா. 61 வயது நிரம்பிய இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த மனைவிகள்மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 பிள்ளைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமம் போன்று உள்ளது.

    இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அனைத்து மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார் கலுஹானா. இது உண்மையில் மிகப்பெரும் சாதனை என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. யூடியூபில் இவரைப்பற்றி ஆவணப்படமும் வெளியாகி உள்ளது.

    அதிக பெண்களை மணந்தது பற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், ‛‛எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான் உள்ளார். அவருக்கு மொத்தம் 1000 மனைவிகள் இருந்தனர். நானும் அரசர் சாலமோன் போன்றவன். பல பெண்களின் கண்களில் நான் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி உள்ளேன். அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும்'' என்றார்.

    இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், ‛‛என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒருபோதும் பொறாமை கொண்டது இல்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்'' என்றார்.

    இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில், ‛‛நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன. நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகிவிட்டோம்'' என்றார்.

    இந்த மெகா குடும்பத்தைப் பற்றிய ஆவணப்படம் வெளியான இரண்டு நாட்களுக்குள் 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. ஏராளமானோர் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் கடும் விமர்சனமும் செய்துள்ளனர். 'அனைவரும் நன்றாக இருப்பதாக மனைவிகள் கூறுகிறார்கள், ஆனால் அவர்கள் சொல்வதை என்னால் உணர முடியவில்லை.. அவர்கள் கண்களில் சோகத்தை மட்டுமே நான் காண்கிறேன்" என்று ஒரு பயனர் சந்தேகம் எழுப்பி உள்ளார்.

    எது எப்படியோ... இன்று கென்யாவின் கல்யாண மன்னனாக கலுஹானா வலம் வருகிறார்.

    • ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
    • இந்த தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வானார்.

    நைரோபி:

    ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட ரைலா ஒடிங்காவின் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

    ஒடிங்காவின் பிரச்சாரத்தில் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் அறிவிப்பு தாமதமானது.

    இந்நிலையில், கென்யா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட துணை அதிபர் வில்லியம் ரூடோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் 50.5 சதவீதம் வாக்குகளைப் பெற்றார்.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரூடோ தனது உரையில், தேர்தலை மேற்பார்வையிட்ட தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. அனைவருக்கும் அதிபராக இருக்க விரும்புகிறேன். எங்களுக்கு எதிராக பல காரியங்களைச் செய்தவர்களுக்கு பயப்பட ஒன்றுமில்லை என்று சொல்ல விரும்புகிறேன். பழிவாங்கும் எண்ணம் இருக்காது. திரும்பிப் பார்க்க எங்களிடம் ஆடம்பரமில்லை என தெரிவித்தார்.

    55 வயதான ரூடோ அதிபர் தேர்தலில் போட்டியிடுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டு வாங்குவதற்கான பல்வேறு வேலைகளில் இறங்கி உள்ளனர்.
    • பெண் வாக்காளர்களை கவர்வதற்காக காய்கறிகளை நறுக்கித்தருகிறார்கள்.

    நைரோபி :

    ஆப்பிரிக்க பாரான கென்யாவில் வரும் 9-ந் தேதி அதிபர் தேர்தலும், பாராளுமன்ற பொதுத்தேர்தலும், கவர்னர் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடுகிற அந்த நாட்டின் அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரத்தின்போது தங்களது ஆடம்பர வாழ்க்கையைக் கைவிட்டு விட்டனர். அவர்கள் வாக்காளர்களைக் கவர்ந்து ஓட்டு வாங்குவதற்கான பல்வேறு வேலைகளில் இறங்கி உள்ளனர்.

    நமது நாட்டில் வேட்பாளர் வாக்காளர்களைக் கவர்வதற்கு டீக்கடையில் டீ தயாரித்தார், புரோட்டா கடையில் புரோட்டா போட்டார் என்றெல்லாம் செய்திகளை அறிந்திருக்கிறோம்.

    ஆனால் கென்யாவில் ஒருபடி மேலே போய்விட்டார்கள். அங்கு தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் துர்நாற்றம் வீசுகிற பொதுக்கழிவறைகளை துடைப்பத்துடனும், வாளியுடனும் சென்று சுத்தமாய்க் கழுவி விடுகிறார்கள். பெண் வாக்காளர்களை கவர்வதற்காக வீடுகளுக்கு ஓட்டு வேட்டையாட செல்கிறபோது வேட்பாளர்கள் காய்கறிகளை நறுக்கித்தருகிறார்கள். நைரோபி கவர்னர் பதவிக்கு போட்டியிடுகிற இகாதே என்ற வேட்பாளர் (படத்தில் இருப்பவர்) பொதுக்கழிவறைகளை சுத்தம் செய்வதுடன், வாக்காளர்களின் கார்களைக் கழுவி விடுகிறாராம். அவர் இரவு விடுதிகளில் மது பரிமாறும் வேலையிலும் ஈடுபடுவது வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

    ஆனால் அரசியல்வாதிகளின் இந்த விளம்பர நாடகம், வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் இந்த நாடகங்களால் ஈர்க்கப்பட மாட்டார்கள் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    நைரோபி வாக்காளர் ஆனி வாம்புய் இதுபற்றி சொல்லும்போது, "தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வரையில் அரசியல்வாதிகளுக்கு சந்தைகள் எங்கே இருக்கின்றன என்பதுகூட தெரியாது. நாங்கள் இந்த நகரத்தில் வாழ்வதற்காக போராடுகிறோம். ஆனால் விலை உயர்ந்த கடைகளில் பொருட்கள் வாங்குகிறவர்கள், எங்கள் ஓட்டுகளை விரும்புகிறபோது, எங்களைப் புரிந்துகொள்வதுபோல நடிக்க வருகிறார்கள்" என வேதனை தெரிவித்தார்.

    ஆனாலும் அரசியல்வாதிகள் ஓட்டு வேட்டையின்போது புதுப்புது உத்திகளை பின்பற்றுவது கென்யாவில் குறையவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×