என் மலர்
உலகம்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ- ஐந்து பேர் உயிரிழப்பு.. அவசரநிலை பிரகடனம்
- காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
- சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்கு கடும் புகைமூட்டம் நிலவி வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், வாகனங்கள் நாசமாகின. காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். அப்பகுதி வீடுகளில் வசித்து வந்த 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். காட்டுத்தீ காரணமாக சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். காட்டுத்தீயால் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காற்றின் வேகம் குறையாததால் கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஆளுநர் கவின் நியூசம் தெரிவித்துள்ளார். நேற்றிரவு (புதன்கிழமை) காற்றின் வேகம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்று (வியாழன் கிழமை) வரை நிலைமை மோசமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறையினர் கூறும் போது, "எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், இத்தகைய காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தீயணைப்பு வீரர்கள் அனைத்து துறைகளிலும் இல்லை," என்று தெரிவித்தார்.